புளோக்குகளுக்கு வண்ணம் பூச வாக்களிப்பு

2 mins read
24b1bdaf-1e86-4957-8274-b2039f7c4223
புளோக் 9ஏ பூன் தியோங் ரோட்டின் வெளிப்புறத்தில், ஊதா நிறம் பல்வேறு சாயல்களில் பூசப்பட்டது. அதில் குறிப்பாக, கருமை அதிகம் கொண்டுள்ள ஊதா நிறம் காண்பதற்கு அழகாக இல்லை என்று சில வட்டாரவாசிகள் தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

தியோங் பாரு வட்டாரத்திலுள்ள 14 புளோக்குகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் அந்தப் புளோக்குகளின் நிறத்தை வாக்களிப்பு முறையில் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்கு முழுவதுமாக ஊதா நிறச் சாயம் பூசப்படவிருந்தது. இது குறித்து அதிருப்தி அடைந்த வட்டாரவாசிகள், தங்களது கருத்து பெறப்படவில்லை என்று கூறினர்.

புளோக் 9ஏ பூன் தியோங் ரோட்டின் வெளிப்புறத்தில், ஊதா நிறம் பல்வேறு சாயல்களில் பூசப்பட்டது. அதில் குறிப்பாக, கருமை அதிகம் கொண்டுள்ள ஊதா நிறச்சாயம், பார்ப்பதற்கு அழகாக இல்லை என்று சில வட்டாரவாசிகள் தெரிவித்தனர்.

மே 17ஆம் தேதியன்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செஸியாங், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.

பூன் தியோங் வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வட்டாரவாசிகளிடம் பேசிய திரு ஃபூ, நிறத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கப்போவதாகக் கூறினார்.

“இது ட்டாரவாசிகளை ஒன்றுதிரட்டி சமூகத்தை உருவாக்க ஒரு வாய்ப்பு,” என்றும் அவர் கூறினார்.

பூன் தியோங் சாலையிலுள்ள வட்டாரவாசிக் குழு நிலையங்கள் இரண்டுக்கும் வெளியே இந்த வாக்களிப்பு நடக்கவுள்ளது. ஆயினும் வாக்களிப்பு எப்போது நடக்கும் என்பது குறித்த விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

சாய நிறத் தெரிவுகளில் ஊதா நிறமும் வெண்மை, ஆரஞ்சு ஆகிய இரண்டு நிறங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற நிறத்தெரிவுகள் இருக்கும் என்றாலும் அவை தற்போது உறுதி செய்யப்படவில்லை.

2015ல் சமூக நிகழ்ச்சி ஒன்றில் வட்டாரவாசிகள் வரிசைகளாக ஊதாநிற போகன்வில்லா மலர்ச்செடிகளை நட்டுவைத்ததைக் குறிப்பிட்ட திரு ஃபூ, அதனைப் பிரதிபலிக்கவே ஊதா நிறச் சாயத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகக் கூறினார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி அடித்தள அமைப்பின் முன்னாள் ஆலோசகரான இந்திராணி ராஜாவுக்கும் தமக்கும் இடையிலான கலந்துரையாடலிலிருந்து இந்த யோசனை உதித்ததாகக் கூறினார். வட்டாரவாசிகளும் கட்டடக் கலைஞர்களும் தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் திரு ஃபூ கூறினார்.

2001 முதல் 2025 வரை தஞ்சோங் பகார் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய திருவாட்டி இந்திராணி ராஜா, பின்னர் பாசி ரிஸ் சாங்கிக் குழுத்தொகுதியை வழிநடத்தச் சென்றார். அந்த அணி, கடந்த பொதுத்தேர்தலில் வென்றது.

கட்டடத்தின் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட மூன்று நான்கு வாரங்களில் சாயம் பூசும் பணி தொடங்கும். இதுவரை 2ஏ பூன் தியோங் சாலைக்குச் சாயம் பூசும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பூன் தியோங் ரோட்டில் மேலும் 11 கட்டடங்களுக்குச் சாயம் பூசப்படும்.

குறிப்புச் சொற்கள்