சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) கார் நிறுத்துமிடத்தின் முதல் மின்னூட்டி நடுவம், தெங்கா வட்டாரத்தில் சனிக்கிழமை (மே 16) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
எஸ்பி குழுமமும் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்தும் அமைப்பான இவிஇ என்றழைக்கப்படும் ‘இவி-எலெக்ட்ரிக் சார்ஜிங்’கும் இணைந்து மின்னூட்ட நடுவத்தை தொடங்கி வைத்தன.
நாடு முழுவதும் மின்வாகனங்களுக்கான மின்னூட்டக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணியை ‘இவிஇ’ மேற்கொண்டு வருகிறது.
இந்தப் புதிய மின்வாகன மின்னூட்டி நடுவத்தில் மொத்தம் 14 மின்னேற்று முனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் எட்டு முனைகள், 100 கிலோவாட் வரையிலான ஆற்றல் கொண்ட ஒருதிசை மின்னோட்ட அதிவிரைவு மின்னூட்டி முனைகளாகும். ஏனைய ஆறு முனைகள், 7.4 கிலோவாட் ஆற்றல் கொண்ட மாறுதிசை மின்னோட்ட மின்னூட்டி முனைகளாகும்.
தற்போது சில வீவக கார் நிறுத்துமிடங்களில் அதிவிரைவு மின்னூட்டிகள் பயன்பாட்டில் இருந்தபோதிலும், எந்தவொரு குறிப்பிட்ட இடத்திலும் அவை ஆறிற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
இதனால், அவை மின்னூட்டி நடுவங்களாகக் கருதப்படுவதில்லை. தெங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நடுவத்தில் எட்டு அதிவிரைவு மின்னூட்டி முனைகள் இருப்பதால், வீவக கார் நிறுத்துமிடம் ஒன்றிற்குள் அமைந்துள்ள சிங்கப்பூரின் முதலாவது மின்வாகன அதிவிரைவு மின்னூட்டி நடுவம் என்ற பெருமையை அது பெறுகிறது.
சிங்கப்பூரின் தேசிய மின்வாகன மின்னூட்டிக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, வீவக குடியிருப்புப் பகுதிக்குள் அமைக்கப்பட்ட முதலாவது அதிவிரைவு மின்னூட்டிகள் கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்புப் பகுதிகளில் கரிம வெளியேற்றத்தைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகச் சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் பசுமைப் போக்குவரத்து உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய நகர்வு அமைந்துள்ளது. இந்தப் புதிய நடுவத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங், வரும் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரின் ஒவ்வொரு வீவக குடியிருப்புப் பேட்டையிலும் இத்தகைய மின்வாகன அதிவிரைவு மின்னூட்டி நடுவங்களை அமைக்கச் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, எஸ்பி மொபிலிட்டி (SP Mobility), ஷெல் சிங்கப்பூர் (Shell Singapore), கம்ஃபர்ட்டெல்குரோ இன்ஜி (ComfortDelGro Engie) ஆகிய நிறுவனங்களுடன் அதிவிரைவு மின்னூட்டிகளுக்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை ‘இவிஇ’ நிறுவனம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

