பொட்டலத்தில் பெரிய சாக்லெட் பையும் மிளகாய்ச் சாந்தும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொருள்களை வாங்கியவர் தற்செயலாகப் பொட்டலத்தைத் திறந்தார். அப்போது அதற்குள் உணவுக்குப் பதிலாகப் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் இருந்ததை விநியோகச் சேவை ஊழியர் கண்டார்.
உடனே தன் நிறுவனத்திற்கு அதனைத் தெரியப்படுத்தினார். நிறுவனம் அதிகாரிகளைத் தொடர்புகொண்டது. பின்னர் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் போதைப்பொருள்களும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுகாதார அறிவியல் ஆணையம் கிரேஞ்ச் ரோட்டிலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 33லும் ஜூலை 22ஆம் தேதி சோதனைகளை மேற்கொண்டது.
கிரேஞ்ச் ரோடு வீட்டில் போதைப்பொருள்களையும் மின்சிகரெட்டுகளையும் விற்றதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயதுப் பெண் நினைவின்றிக் காணப்பட்டார்.
போதைப்பொருள் சாதனங்கள், 43 மின்சிகரெட் சாதனங்கள், 13 மின்சிகரெட்டுகள் முதலியவை கைப்பற்றப்பட்டன.
தெம்பனிசில், பொருள்களை வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுபவரிடமிருந்து 0.6 கிராம் ‘ஐஸ்’, போதைப்பொருள் சாதனங்கள், மின்புகையிலைச் சாதனங்கள், ஒரு மின்சிகரெட், எட்டோமிடேட் கலந்த 4 மின்சிகரெட்டுகள், தீர்வை செலுத்தாத சில சிகரெட்டுகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள்களை வாங்கியதாகச் சந்தேகிக்கப்படும் 34 வயது ஆடவர் போதைப்பொருள் குற்றங்களின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டார்.
மின்சிகரெட், போதைப்பொருள் குற்றங்களுக்காக இருவரும் விசாரிக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட்டுகளை விநியோகித்த குற்றச்சாட்டுகளின் தொடர்பில் இவ்வாண்டு (2025) நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அத்தகைய சாதனங்களை விநியோகிப்போர் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
விநியோகச் சேவை ஊழியர்களும் ஓட்டுநர்களும் தாங்கள் கொடுக்கும் பொட்டலங்கள் குறித்துக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் சந்தேகத்திற்குரிய பொருள்களைக் கண்டால் அவற்றைப் பற்றி அருகில் இருக்கும் காவல்துறைப் பிரிவிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மின்சிகரெட்டை வைத்திருந்தாலோ பயன்படுத்தினாலோ வாங்கினாலோ அதிகபட்சம் $2,000 அபராதம் விதிக்கப்படக்கூடும்.
மின்சிகரெட்டுகளையும் அவற்றின் சாதனங்களையும் விநியோகித்தாலோ இறக்குமதி செய்தாலோ விற்றாலோ அதிபட்சம் $10,000 அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை வைத்திருந்தாலோ பயன்படுத்தினாலோ அதிபட்சம் $10,000 அபராதம் அல்லது ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

