மத்திய விரைவுச்சாலையிலுள்ள சுரங்கப்பாதையின் உட்கூரைமீது மோதி, அதில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளும் சாலைப் பயன்பாட்டுப் பலகைகளும் கழன்றுவிழ காரணமாக இருந்த கனரக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
லாரி 4.5 மீட்டருக்கு மேல் உயரமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இத்தகைய சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, உட்கூரைப்பகுதிக்கு எவ்வித கட்டமைப்புச் சேதமும் ஏற்படவில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கனரக லாரி ஏற்படுத்திய சேதத்தைக் காட்டும் காணொளிப் பதிவு ஒன்று பின்னிரவு 1.15 மணிக்கு எடுக்கப்பட்டது. வழக்கமாக, மறைவாக உள்ள விளக்குப் பகுதிகளும் கம்பிகளும் அந்தக் காணொளியில் சாலையின் இரு தடங்களில் சிதறிக் கிடக்கக் காணப்பட்டன.
ஹேவ்லாக் சாலையின் வெளிவழி அருகே இச்சம்பவம் நடந்ததாகக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தால் இடப்பக்கம் உள்ள தடம் மட்டுமே போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து காலை 10.20 மணியளவில் மூடப்பட்டிருந்த முதலாம், இரண்டாம் தடங்கள் மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
சேதமடைந்த பகுதிகள் பின்னாளில் சரிசெய்யப்படும் என்று அறியப்படுகிறது.
கனரக லாரியை ஓட்டிய 39 வயது ஆடவர், 4.5 மீட்டருக்கு அதிகமான உயரம் கொண்ட கனரக மோட்டார் வாகனத்தைக் காவல்துறை அல்லது துணைக்காவல்துறை அதிகாரியின் துணையின்றி ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

