தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

களைப்பிலும் சளைக்காத சிறைத்துறை வீராங்கனைகள்

3 mins read
துறை மாறி, கைதிகளின் மனங்களை மாற்றும் பெண்கள்
68ebf423-fa91-458a-ad67-7cc80218c5ac
சிறைச்சாலைகளின் பெண் அதிகாரிகளின் திண்மையைச் சோதித்தது ஆசிய சிறைகள் முழு அடைப்புச் சவால் முதன்முறையாக நடத்திய பெண்களுக்கான சவால். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

துப்பாக்கிச்சூடு; சுவர்கள்மீது ஏறி இறங்குதல்; கயிற்றைப் பிடித்து ஏறுதல்; கம்பிகளுக்கிடையே தாவுதல்; கனமான வாகனச் சக்கரத்தைத் தள்ளுதல்.

இவ்வாறு களைப்பின் உச்சக்கட்டத்திலும் இலக்கைக் கைவிடாது மொத்தம் 14 சவால்களைக் கடந்தனர் பெண் சிறை அதிகாரிகள் நால்வர்.

சிங்கப்பூர் சிறைத் துறையின் ‘ஸ்பியர்’ எனும் அவசரநிலைச் செயற்குழு, 2010 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை ஆசியச் சிறைகள் முழு அடைப்புச் சவாலை (Asian Prisons Lockdown Challenge) ஏற்பாடு செய்துவருகிறது. அதன் ஏழாம் அத்தியாயம் செப்டம்பர் 23 முதல் 26ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இவ்வாண்டு முதன்முறையாக அதில் ஓர் அங்கமாக, பெண்களுக்கான நிபுணத்துவச் சவால் இடம்பெற்றது.

முதன்முறையாக நடைபெற்ற பெண்களுக்கான சவாலில் பங்கேற்ற சிங்கப்பூர் சிறைச் சேவை அதிகாரிகள் டேட் குவெக் (இடம்), பிரென்னா சிம் (வலம்), ஹாங்காங் சிறை அதிகாரி இயூ யின்-டிங் (இடமிருந்து இரண்டாவது), மலேசியச் சிறை அதிகாரி நூர் சுஹானி.
முதன்முறையாக நடைபெற்ற பெண்களுக்கான சவாலில் பங்கேற்ற சிங்கப்பூர் சிறைச் சேவை அதிகாரிகள் டேட் குவெக் (இடம்), பிரென்னா சிம் (வலம்), ஹாங்காங் சிறை அதிகாரி இயூ யின்-டிங் (இடமிருந்து இரண்டாவது), மலேசியச் சிறை அதிகாரி நூர் சுஹானி. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் இருவர், ஹாங்காங், மலேசிய சிறை அதிகாரிகள் இருவர் போட்டியிட்டனர்.

சவால்களை 6 நிமிடங்கள், 46 வினாடிகளில் முடித்து இரண்டாம் நிலையில் வந்தார் சிங்கப்பூர் சிறைத் துறையின் இரண்டாம் மறுஒருங்கிணைப்பு அதிகாரி பிரென்னா சிம், 29.

சுற்றுச்சூழலிலிருந்து சிறைச்சூழலுக்கு மாற்றம்

முன்பு சுற்றுச்சூழல் பொறியாளராக ஈராண்டுகள் பணியாற்றிவந்த பிரென்னா, அன்றாடம் புதிய அனுபவங்களை வழங்கும் வேலையை நாடி சிறைத் துறையில் சேர்ந்தார். தற்போது அவர் கைதிகளுக்கான திட்டங்களை வகுத்து, அவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமூகத்துக்குத் திரும்புவதை உறுதிசெய்கிறார்.

சில மாதங்கள் முன்பு சிங்கப்பூர் சிறைத் துறையின் ‘ஸ்ட்ரோங்மேன்’ சவாலிலும் பங்கேற்று முதல் நிலையில் வந்திருந்தார் பிரென்னா.

மூன்றாம் நிலையில் வந்தார் சிங்கப்பூர் சிறைத் துறை ஒன்றாம் மறுஒருங்கிணைப்பு அதிகாரி டேட் குவெக், 26.

“அதிகாரி பிரென்னா எங்கள் அனைவருக்கும் முன்னுதாரணம். அவர் இச்சவாலில் சேர்ந்ததால்தான் நானும் இச்சவாலில் சேர்ந்தேன். அவர்தான் எனக்கும் பயிற்சி வழங்கியவர்,” என்றார் அவர்.

மூன்றாம் நிலையில் வந்த சிங்கப்பூர் சிறைச் சேவை ஒன்றாம் மறுஒருங்கிணைப்பு அதிகாரி டேட் குவெக்.
மூன்றாம் நிலையில் வந்த சிங்கப்பூர் சிறைச் சேவை ஒன்றாம் மறுஒருங்கிணைப்பு அதிகாரி டேட் குவெக். - படம்: சாவ்பாவ்

முன்பு நிதி ஆலோசகராகப் பணியாற்றிவந்த அதிகாரி டேட், சென்ற ஆண்டு சிங்கப்பூர் சிறைச் சேவையில் சேர்ந்தார். தற்போது அவர் போதைப்பொருள் மறுவாழ்வுத் திட்டங்களில் பங்கேற்கும் ஆண் கைதிகளுடன் பணியாற்றுகிறார்.

“எனக்குப் படகோட்டுதல், மலையேறுதல், போன்ற நடவடிக்கைகளில் நாட்டம் உண்டு; ஆனால், இத்தகைய சவாலில் பங்கேற்பது இதுவே எனக்கு முதன்முறை,” என்றார் அதிகாரி டேட்.

ஹாங்காங் சிறைத் துறையைச் சார்ந்த 27 வயது சிறை அதிகாரி இயூ யின்-டிங், 6 நிமிடங்கள், 16 வினாடிகளில் அனைத்துச் சவால்களையும் முடித்து முதல் நிலையில் வந்தார். ஹாங்காங்கில் ஏற்கெனவே குழுப் போட்டிகளில் வென்ற அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.

முதல் நிலையில் வந்த ஹாங்காங் சிறை அதிகாரி இயூ யின்-டிங்.
முதல் நிலையில் வந்த ஹாங்காங் சிறை அதிகாரி இயூ யின்-டிங். - படம்: சாவ்பாவ்

குழு அளவில், புருணை, ஹாங்காங், மக்காவ், மலேசிய, தென்கொரிய அணிகளுடன் மூன்று சிங்கப்பூர் அணிகள் வெவ்வேறு சவால்களில் மோதுகின்றன.

சிங்கப்பூர் சிறைத் துறையின் ‘கிலஸ்டர் ஏ’ அணியை வழிநடத்துகிறார் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜ‌ஷெகர் கர்ணாகரன், 39. 2023ல் அவர் இப்போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகவும் இருந்தார்.

புதிய நட்புகளை உருவாக்கவும் எதிர்காலத்தில் மற்ற சிறைகளுடன் இணைப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் இது வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது,” என்றார் அவர்.

சென்ற முறை ஆசியச் சிறைகள் முழு அடைப்புச் சவாலை வழிநடத்திய துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜ‌ஷெகர் (வலம்), இவ்வாண்டு பங்கேற்பாளராகக் ‘கிளஸ்டர் ஏ’ அணியை வழிநடத்தினார்.
சென்ற முறை ஆசியச் சிறைகள் முழு அடைப்புச் சவாலை வழிநடத்திய துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜ‌ஷெகர் (வலம்), இவ்வாண்டு பங்கேற்பாளராகக் ‘கிளஸ்டர் ஏ’ அணியை வழிநடத்தினார். - படம்: சிங்கப்பூர் சிறைத் துறை

போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, மற்ற நாட்டின் அணிகள், சிங்கப்பூர் சிறைச் சேவை நடத்தும் பயிலரங்குகளிலும் பங்கேற்கும். ‘ஸ்பியர்’ அணி அதன் உயிர்ச்சேதம் விளைவிக்காத ஆயுதங்களையும் காட்சிப்படுத்தும்.

2025ல் அமெரிக்காவில் நடந்த மாதிரிச் சிறைக் கலவரப் போட்டியில், 17 அணிகளுடன் மோதி ‘பிணைக்கைதிகள் மீட்பது’, ‘குழுவாகத் தடைகளைக் கடப்பது’ பிரிவுகளில் ‘ஸ்பியர்’ அணி முதல் நிலையில் வந்தது; தனிநபர் வெற்றிகளையும் பெற்றது. தாய்லாந்து சிறைப் போட்டியிலும் சிங்கப்பூர் அணி இரு பிரிவுகளில் முதல் நிலையைப் பிடித்தது.

குறிப்புச் சொற்கள்