தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோ பாயோ கைகலப்பு: 11 ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும்

2 mins read
f47c591c-3c7d-4333-b0b2-200dd823aedd
தோ பாயோ காப்பிக் கடையில் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம். - படம்: எஸ்ஜி சீக்ரெட் சேனல் / டெலிகிராம், சிங்கப்பூர்க் காவல்துறை

தோ பாயோ வட்டாரத்தில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 11 ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

ஆயுதம் தாங்கி கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

காவல்துறை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் தொடர்பில் 12 ஆடவர்களும் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்தது. அவர்கள் 21 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

தோ பாயோ லோரோங் 7இல் உள்ள புளோக் 10பி காப்பிக் கடையில் நடந்த சம்பவம் தொடர்பில் ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் காப்பிக் கடைக்கு அருகில் சலசலப்பு மூண்டதாகத் தெரிகிறது.

இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 13 பேர் கொண்ட குழு இருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலர் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு 21 வயது, மற்றவருக்கு 30 வயது. கைகளிலும் முதுகிலும் குத்தப்பட்டதாக நம்பப்படும் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலமும் கண்காணிப்புக் கேமராக்கள், காவல்துறை கேமராக்கள் ஆகியவற்றில் பதிவான படங்கள் மூலமும் தங்ளின் காவல்துறை பிரிவும் குற்றவியல் புலனாய்வுத் துறையும் சம்பந்தப்பட்டோரை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

சண்டையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங்கத்தியும் கைப்பற்றப்பட்டது.

கொடிய ஆயுதத்துடன் கைகலப்பில் ஈடுபட்டதாக 21 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்கள்மீது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

அதற்கு அடுத்த நாளில் 23க்கும் 24க்கும் இடைப்பட்ட வயதுடைய எழுவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

எஞ்சிய இருவரான 30 வயது ஆடவரும், 22 வயது பெண்ணும் காவல்துறையின் விசாரணையில் உதவுவர்.

சந்தேக நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்