தோ பாயோவில் 49 வயது ஆடவர் ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு இன்னொருவரைத் தாக்கியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதனைத் தெரிவித்தது.
தோ பாயோ லோரோங் 1ல் உள்ள புளோக் 168இலிருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணிக்கு உதவி கேட்டுத் தொடர்புகொள்ளப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
சுய நினைவுடன் இருந்த 59 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி டிக்டாக் பதிவொன்றில் காவல்துறையின் மூன்று கார்கள் தோ பாயோ லோரோங் 1ல் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அவற்றுடன் அவசர மருத்துவ வாகனமொன்றும் இருந்தது.
காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து ஒரு பேனாக்கத்தியைக் கைப்பற்றினர்.
விசாரணை தொடர்கிறது.