‘டுடே’ இணையச் செய்தித் தளம் அக்டோபர் 1 முதல் ‘சிஎன்ஏ’வுடன் இணைகிறது.
இணைந்த பின்னர், வார இறுதி மின்னிலக்க சஞ்சிகையாக அது வெளிவரும்.
இதனை மீடியாகார்ப் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அறிவித்தது.
“சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள அதிகமான சிஎன்ஏ பார்வையாளர்களுக்கு ‘டுடே’யின் சிறப்புத்தன்மையை சிஎன்ஏ மின்னிலக்கத்தளம் வாயிலாக வழங்க இந்த இணைப்பு கைகொடுக்கும்,” என்று சிஎன்ஏ அறிக்கை தெரிவிக்கிறது.
எல்லா பணியாளர்களுக்கும் அவரவர் திறனுக்கேற்ப சிஎன்ஏவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மீடியாகார்ப்பின் தலைமைப் பொறுப்பாசிரியர் வால்டர் ஃபெர்னாண்டஸ் கூறியதைக் காட்டும் தகவல் ஒன்றை பார்வையிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
புதிய வார இறுதி மின்னிலக்க சஞ்சிகைக்காக ஏற்படுத்தப்படும் குழுவின் ஒரு பகுதியாகவோ அல்லது இதரக் குழுக்களைப் பலப்படுத்தும் பொறுப்புகளிலோ அந்தப் பணியாளர்கள் அமர்த்தப்படலாம் என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே கணிசமான அளவில் வளர்ந்திருக்கும் சிஎன்ஏவின் மின்னிலக்க சேவை இந்த இணைப்பின் மூலம் இன்னும் வலுவாகும். குறிப்பாக, வார இறுதிகளில் சிஎன்ஏவின் வளர்ச்சிக்கு அது உதவும் என்று திரு ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.
இணைப்பு குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் கடந்த ஆண்டு பல்வேறு தெரிவுகளைப் பரிசீலித்ததாக அவர் குறிப்பிட்டார்.

