அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் 21 மாதக் குழந்தையைக் காப்பாற்று வதற்கான காலம் குறைந்து வரும் நிலையில் மருத்துவச் செலவுக்கு இரண்டு மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட விலையுயர்ந்த மருந்து ஒன்று அந்தக் குழந்தைக்குத் தேவைப்படுகிறது. 'ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) என்ற நோவார்டிஸ் நிறுவனத்தின் மருந்து மரபணு சிகிச்சைக்காக ஒருமுறை வழங்கப்படக்கூடியது. அதன் விலை மூன்று மில்லியன் வெள்ளி. ஆனால் $2,397,300க்கு குறைக்கப்பட்டுள்ளது. அவர் களின் காப்புறுதி நிறுவனம் எஞ்சியச் செலவுகளை ஈடுகட்ட முன்வந்துள்ளது.
திரு அச்சிந்தா பிலபித்திய, அவரது மனைவி திருமதி துலாஞ்சலி வாக்வெலா (இருவருக்கும் வயது 33), தம்பதியிடம் தற்போது மகனுக்குச் சிகிச்சை யளிக்க போதுமான பணம் உள்ளது.
அவர்களுடைய மகன் ஷமெல் அரிய முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
'ரே ஆஃப் ஹோப்' நன்கொடைத் தளத்தின் மூலம் அவர்கள் $2.02 மில்லியனைத் திரட்டினர். வெளிநாட்டில் உள்ள நன்கொடையாளர்கள் மூலம் மேலும் 294,000 வெள்ளி திரட்டப்பட்டது. எஞ்சிய செலவுகள் காப்புறுதி மூலம் செலுத்தப்படவிருக்கிறது.
"எங்களுடைய சக்தியெல்லாம் தீர்ந்து ஓய்ந்தபிறகு மருத்துவமனையில் இருந்து நற்செய்தி வந்தது," என்றார் மென்பொருள் நிபுணர் திரு அச்சிந்தா.
ஏப்ரல் 21ஆம் தேதி 'ஸோல்ஜென்ஸ்மா' மருந்து பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் மூலம் அறியப்படுகிறது.
இந்த மரபணு சிகிச்சை உலகிலேயே ஆகச்செலவுமிக்கது. குழந்தை இரண்டு வயதை அடைவதற்குள் கொடுத்தாக வேண்டும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்றுப் பேசிய ஷமெலின் பெற்றோர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மூலம் மருந்தை வாங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.