தோ பாயோ காப்பிக் கடை ஒன்றில் கலவரம் செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட சிலரைக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெங்கா காற்பந்தாட்டக் குழு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி கலவரத்தில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்ட 11 ஆடவர்களில் தனது குழுவைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் அடங்குவர் என்பதைத் தெங்கா காற்பந்தாட்டக் குழு உறுதிப்படுத்தியது.
“விளையாட்டாளர்களின் ஈடுபாடு குறித்து தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அவர்கள் அனைத்து குழு நடவடிக்கைகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்,” என்று தெங்கா காற்பந்தாட்டக் குழு இன்ஸ்டகிராமில் கூறியது.
வன்முறையையோ குண்டர் கும்பல் நடவடிக்கையையோ விளையாட்டுக்கும் சமூகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் எந்தவொரு நடத்தையையோ காற்பந்தாட்டக் குழு சகித்துக்கொள்ளாது என்று அது குறிப்பிட்டது.
சிங்கப்பூர் காற்பந்து லீக்கின் முதலாம் பிரிவில் உள்ள எட்டு அணிகளில் தெங்கா காற்பந்துக் குழுவும் ஒன்று.
கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூர்க் காற்பந்தாட்ட லீக்கில் இணைய சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம், தெங்கா காற்பந்துக் குழுவுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.
தோ பாயோ லோரோங் 7 புளோக் 10Bயில் ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் கைகலப்பு நடப்பது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் 12 ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் கைதுசெய்தனர். அவர்கள் 21லிருந்து 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் வழக்கு இம்மாதம் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.