மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கும் 30 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் குறித்து டோ யி குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக ஜூலை மாதம் அவ்வட்டாரத்தில் உள்ள சிறுவர்களிடம் பேசி, அவர்களின் தொடர்பு எண்களை ஆடவர் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது.
டோ யி வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், இதுகுறித்து அறிவுறுத்தல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதே ஜூலை மாதத்தில் ஒரு சிறுமியையும் அவரின் இல்லப் பணிப்பெண்ணையும் அவர்களின் புளோக் வரை அந்த ஆடவர் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
தனக்காகப் பொருள்கள் வாங்குமாறு சிறுவர்கள் சிலரிடம் வெவ்வேறு சம்பவங்களில் அந்த ஆடவர் கேட்டிருப்பதாகவும் அவர்களைத் தன் வீட்டுக்கு அழைக்க முயன்றதாகவும் கட்டமைப்பின் தலைவர் திரு டெரிக் டான் அந்த அறிவுறுத்தல் குறிப்பில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, டோ யி வட்டாரத்தில் அமைந்துள்ள பெய் ஹுவா பிரஸ்பிட்டேரியன் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் இந்த எச்சரிக்கையை அறிந்துள்ளாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிக்கு அருகே உள்ள விளையாட்டுத் திடலில் அந்த ஆடவர் தென்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தாம்சன் பிளாசாவில் ஒன்பது வயதுச் சிறுமியிடம் அவரின் தொடர்பு எண்ணைக் கேட்டதாக ஆடவர் ஒருவர் மீது சிறுமியின் தந்தை குற்றம்சாட்டிக் கேள்வி கேட்ட காணொளி ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் வலம்வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இரண்டிலும் ஒரே ஆடவர் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்பது குறித்த கேள்விக்குக் காவல்துறையினர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

