சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்குக் கட்டணம் உயர்த்தப்படும்

சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்குக் கட்டணம் உயர்த்தப்படும்

2 mins read
80e604f5-f41b-47d0-975a-3d05a7271e9d
வருகின்ற 2027ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் 2027 ஜனவரி 1ஆம் தேதிமுதல் சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும்.

அதனுடன் ஆண்டுக்கு 10 நாள்களும் வாரத்தில் குறிப்பிட்ட சிலமணி நேரங்களும் இலவசமாக வழங்கப்பட்ட அவ்வகை வாகனங்களின் நுழைவுகளுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படும்.

இந்த விவரங்களை நிலப்போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அறிவித்தது. விலைவாசியை முன்வைத்து சிங்கப்பூரில் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவதற்கும் வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை இங்கு ஓட்டுவதற்கும் உள்ள வேறுபாடுகளை ஆணையம் அடிக்கடி ஆய்வு செய்கிறது.

அந்த வகையில் இரு சார்புக்குமான விலைவாசிப் பாகுபாடு அதிகரித்துள்ளதால் இந்த கட்டண உணர்வு அவசியமாகிறது என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது,

விஇபி (VEP) எனப்படும் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி உரிமம் கார்களுக்கு ஒரு நாளுக்கு $50 எனவும் மோட்டார்சைக்கிள்களுக்கு $7 எனவும் உயர்த்தப்படும். தற்போது அது கார்களுக்கு $35 எனவும் மோட்டார்சைக்கிள்களுக்கு $4 எனவும் உள்ளது.

ஜனவரி 2027ஆம் ஆண்டு 1ஆம் தேதி முதல் வார இறுதிகளையும் சிங்கப்பூர் பொதுவிடுமுறை நாள்களையும் தவிர்த்து, அனைத்து நாள்களுக்கும் வெளிநாட்டு வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

தற்போது வார இறுதிகளிலும் சிங்கப்பூர் பொதுவிடுமுறை நாள்களிலும் ஓர் ஆண்டில் 10 குறிப்பிட்ட நாள்களிலும் இலவசமாக வெளிநாட்டு வாகனங்களும் மோட்டார்சைக்கிள்களும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு வண்டிகளுக்கான ஒரு மாத உரிமக் கட்டணமும் (GVP) 2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி $40யிலிருந்து $70க்கு உயர்த்தப்படும். சரக்கு வாகனங்களை ஓட்டிவரும் உரிமையாளர்கள் அதுவரையில் அவற்றை $40 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

அதற்குப் பிறகு, புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் $70 கட்டணத்தைச் செலுத்தி சரக்கு வாகன உரிமையாளர்கள் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

சிங்கப்பூரில் 2027ஆம் ஆண்டு முதல் செயல்படப்போகும் புதிய சாலைக் கட்டண முறையில் (இஆர்பி) இணைந்துகொள்ளும் வெளிநாட்டு வாகனங்கள், இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் ஓபியு (OBUs) கருவிகளை வாகனங்களில் பொருத்திக்கொள்ளலாம்.

அவ்வாறு பொருத்தாத அனைத்து வாகனங்களும் ஒரு நாளைக்கு $10, மோட்டார்சைக்கிள்கள் $3 எனக் கட்டணம் செலுத்தி சிங்கப்பூரில் வாகனங்களை ஓட்டலாம்.

குறிப்புச் சொற்கள்