சிங்கப்பூரை ஆகாயம் மற்றும் கடல் மார்க்கமாக சீண்டுவது, தொழில்நுட்பம் மூலம் ஊடுருவல் செய்து நெருக்கடி ஏற்படுத்துவது, தண்ணீர் வளத்தில் இடையூறுகள் ஏற்படுத்துவது போன்றவற்றைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயுதப் படை உள்ளிட்ட பல அரசாங்க அமைப்புகளின் உடனடி உதவி மிக முக்கியமானது.
இதுபோன்ற சூழ்நிலைகளை சிங்கப்பூர் எப்படி சமாளிக்கும் என்பதை பாடாங் திடலில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் முழுமைத் தற்காப்பு அமைப்புகள் செய்து காட்டின.
பலவகை அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முழுமைத் தற்காப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக அது இருந்தது. முழுமைத் தற்காப்பின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாகவும் அது அமைந்தது.
சிங்கப்பூரின் ஆகாயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விமானம் ஒன்றை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை எப்படி சமாளிக்கும் என்பது பார்வையாளர்கள் முன் செய்து காட்டப்பட்டது.
ஆகாயப் படையின் இரண்டு F-16 அதிவேக விமானங்களும் நிலத்தில் இருந்து செயல்படும் இரண்டு ஆகாயத் தற்காப்பு கட்டமைப்புகளும் அத்துமீறி நுழைந்த விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தன.
கடல் மார்க்கமாக வந்த அச்சுறுத்தலை சிங்கப்பூர் குடியரசு கடற்படை அதிகாரிகள் எவ்வாறு சமாளித்தனர், அவர்களுக்கு உதவியாக அப்பாச்சி வகை ஹெலிகாப்டர்கள் எப்படி உதவின என்பது கண்முன் செய்து காட்டப்பட்டது.
வெளிப்புற அச்சுறுத்தல்களை சிங்கப்பூர் எப்படி சமாளித்ததோ அதேபோல் உள்நாட்டிற்குள் வரும் அச்சுறுத்தல்களை அதிகாரிகள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதும் செய்துகாட்டப்பட்டது.
சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாகனத்தை காவல்துறையினர் எப்படி நிறுத்தினர். கடத்தப்பட்ட பேருந்து ஒன்றை ஆயுதப்படையின் அதிரடிப் பிரிவு எவ்வாறு மீட்டனர் என்பதை அதிகாரிகள் செய்துகாட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேகத்திற்குரிய வகையில் உள்ள பை ஒன்று குறித்து எஸ்ஜி செக்யூர் (SG Secure) செயலி மூலம் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்தப் பையில் வெடிகுண்டு இருப்பதை அறிந்த அதிகாரிகள் எந்திரத்தின் உதவி மூலம் வெடிகுண்டை அழித்தனர்.
இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளை சிங்கப்பூர் எப்படி சமாளிக்கும் என்பதை அதிகாரிகள் தேசிய தின அணிவகுப்பில் தெளிவாக எடுத்துக்காட்டினர்.

