இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, பள்ளிகளுக்கும் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுக்கும் உண்பதற்குத் தயாராக உள்ள 150,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.
இங்குள்ள 90க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் மூன்று தொழில்நுட்பக் கல்விக் கழங்களிலும் 100,000க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும், 111 துடிப்புடன் மூப்படையும் நிலையங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 8,000 மூத்த குடிமக்களுக்கும் இந்த உணவை உண்ணலாம்.
உணவு கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பொருள்களைக் கொண்டிராத இந்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை.
சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும் இந்த உணவு விநியோகம், ‘2025 எக்சர்சைஸ் எஸ்ஜி ரெடி’யின் ஒரு பகுதியாக அமைகிறது.
ஹலால் சான்றளிக்கப்பட்ட அந்த உணவு வகைகளில் பிரியாணி சோற்றுடன் கோழிக் கறி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பரங்கிக்காயுடன் மீன் கஞ்சி, காய்கறி மரினாரா பாஸ்தா உள்ளிட்டவை அடங்கும். சேட்ஸ் நிறுவனம் இவற்றைத் தயாரிக்கிறது.
2025ல் நடைபெறும் முழுமைத் தற்காப்பு நடவடிக்கையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை, 2024ல் வழங்கப்பட்ட 50,000ஐவிட மும்மடங்காகும்.
சிங்கப்பூர் உணவு அமைப்புடன் இணைந்து செயல்படும் சேட்ஸ், அனைத்து உணவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்டிருப்பதையும் ஊட்டச்சத்து தேவைகளை அவை பூர்த்திசெய்வதையும் உறுதிசெய்கிறது.
வெவ்வேறு பிரிவினரின் உணவுத் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சைவம் உண்போருக்கு காய்கறி மரினாரா பாஸ்தா பொருத்தமாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
சேட்ஸ் நிறுவனம் ஏறக்குறைய 10 உணவு வகைகளைத் தயாரித்த பிறகு, உணவு அமைப்புடன் சேர்ந்து இந்த உணவு தேர்வுசெய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் புத்தாக்க, பொருள் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் ஜீன் சின் கூறினார்.