தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கருவள விகிதம் 0.97ல்தான் உள்ளது; 2024ல் அதிகரிக்கவில்லை

2 mins read
2f3b7484-ce5c-4326-8d24-18a65965d9a0
2024ஆம் ஆண்டு குழந்தை பிறப்பு எண்ணிக்கை 30,800ஆக உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் காட்டுகின்றன. இது 2023ஆம் ஆண்டின் பிறப்பு எண்ணிக்கையான 30,500ஐவிட சற்றே கூடுதல். - படம்: லியன் ஹ சாவ்பாவ்

கடல்நாக ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த கருவள விகிதம் அதிகரிக்கவில்லை. அது 2023ஆம் ஆண்டு இருந்ததுபோலவே 0.97ஆகத்தான் இருக்கிறது.

“சிங்கப்பூரில் கருவள விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டு வருகிறது. இது இளம் தம்பதியினரிடையே காணப்படும் மனப்போக்கு, முன்னுரிமைகளை எடுத்துக்காட்டுகிறது,” என்று பிரதமர் அலுவலக அமைச்சர் திருவாட்டி இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடியிருப்பாளரிடையே 30,800 குழந்தைகள் பிறந்ததாகத் தெரிகிறது. இது 2023ஆம் ஆண்டில் பிறந்த 30,500 குழந்தைகளைவிட சற்றே அதிகம் என்று பிரதமர் அலுவலகத்தின்கீழ் இயங்கும் தேசிய மக்கள்தொகை, திறன் வளர்ப்புப் பிரிவுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கினார்.

இந்தப் பிறப்பு எண்ணிக்கை சிங்கப்பூரில் தம்பதியரில் குறைந்தது ஒருவர் சிங்கப்பூரர் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசியாக உள்ள ஒருவருக்கு பிறக்கும் குழந்தை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

2024ஆம் ஆண்டு குழந்தை பிறப்பு கூடியது கருவள விகிதத்தை அதிகரிக்கவில்லை என்று கூறிய அமைச்சர், அது ஒரு மாது தனது பிள்ளைப்பேறு பருவத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாக விளக்கினார். அந்த விகிதம் இன்னமும் 0.97ஆகவே இருப்பதை அவர் சுட்டினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திருவாட்டி இந்திராணி ராஜா, குறைவான கருவள விகிதம், விரைவாக மூப்படையும் மக்கள்தொகை ஆகியவை சிங்கப்பூர் பொருளியலுக்கும் சமுதாயத்துக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெளிவுபடுத்தினார்.

“நமது உள்ளூர் ஊழியரணி வளர்ச்சி மெதுவடையும்போது, பொருளியல் வளர்ச்சியைக் கட்டிக்காத்து துடிப்பான பொருளியலை கொண்டிருப்பது சவாலான பிரச்சினையாக விளங்கும்,” என்றும் கூறிய அமைச்சர் இந்திராணி ராஜா, மூப்படைந்து வரும் மக்கள்தொகையை ஆதரிக்க குறைவான இளையர்களே இருப்பர் என்றார்.

குறிப்புச் சொற்கள்