திங்கட்கிழமை (ஜூலை 13) இரவு நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் கிட்டத்தட்ட $12.8 மில்லியன் ($12,817,992) மதிப்பிலான முதல் பிரிவுக்கான பரிசுத் தொகையை இரண்டு அதிர்ஷ்டசாலிகள் வென்றுள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஏறத்தாழ $6.4 மில்லியன் பரிசுத் தொகை கிடைக்கிறது. 14, 22, 32, 33, 36, 46 ஆகியவை வெற்றி எண்களாகவும் 42 உபரி எண்ணாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வெற்றிச் சீட்டுகளும் ‘QuickPick System 7’ முறையில் வாங்கப்பட்டவை ஆகும். அதில் ஒன்று இணையம் வழியாகவும் மற்றொன்று பிடோக் ரெசவோர் சாலையில் உள்ள புளாக் 121ல் இருக்கும் மளிகைக் கடையிலும் வாங்கப்பட்டதாக சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளம் தெரிவித்தது.
முன்னதாக, ஜூலை 2ஆம் தேதியன்று $1.2 மில்லியனானத் தொடங்கிய இந்தப் பரிசுத் தொகை, அடுத்தடுத்த குலுக்கல்களில் முதல் பிரிவில் யாரும் வெற்றி பெறாததால், ஜூலை 9ஆம் தேதிக்குள் $5.7 மில்லியன உயர்ந்தது. டோட்டோ விதிகளின்படி, தொடர்ந்து நான்கு குலுக்கல்களில் முதல் பிரிவில் யாரும் வெற்றி பெறாவிட்டால், அந்தப் பரிசுத் தொகை அடுத்த குலுக்கலில் தகுதியுடைய வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
இதற்கு முன்பு மே 4ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் ஒருவர் மட்டுமே $12.8 மில்லியன் ஜாக்பாட் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

