வேக வரம்பு, போக்குவரத்து விளக்கு மீறலுக்குக் கடுமையான நடவடிக்கைகள்

2 mins read
48c1d175-b7bd-4150-8538-a2f406739ffa
சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் ஓட்டுவதற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைப் போக்குவரத்துக் காவல்துறை எடுத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகனங்கள் வேகமாகச் செல்வதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து விளக்குகளை மீறும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரு ஹோ சான் சியோவ் மற்றும் திரு பீட்டர் தியோ பூன் ஹாவ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் கருத்து பிரிவுக்கு எழுதிய கடிதங்களைப் பார்த்தோம் என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் காவல்துறை அதற்குப் பதிலளித்துள்ளது.

வேக வரம்பை மீறுதல் மற்றும் சிவப்பு விளக்கில் நிற்காமல் கடந்து செல்லுதல் ஆகியவை மிகவும் கவலைக்குரியவை என்ற கடிதத்தை எழுதியவர்களுடன் நாங்கள் உடன்படுகிறோம்.

இதனால்தான் போக்குவரத்து காவல்துறை இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக அபராதம், தண்டனைப் புள்ளிகள், ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம், வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் மற்றும்/அல்லது சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதித்துள்ளது.

போக்குவரத்து காவல்துறை வேக வரம்பை மீறுதலுக்கு எதிரான அமலாக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதில் வெளிப்படையான, ரகசிய சுற்றுக்காவல்கள், அதிக வேகத்தைப் பதிவு செய்யும் அமலாக்க கேமராக்களைப் பயன்படுத்துதல், சிவப்பு விளக்கு கேமராக்களில் வேக அமலாக்கத்தைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

இதன் விளைவாக அதிக வேக விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன; 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட 120,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 45 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கனரக வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காக, போக்குவரத்துக் காவல்துறை கட்டாய வேகக் கட்டுப்பாட்டு முறையை நீட்டித்துள்ளது. அதிகபட்சமாக 3,501 கிலோ முதல் 12,000 கிலோ வரை எடை கொண்ட லாரிகளுக்கு இது பொருந்தும். இது அவற்றின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 60 கிமீ ஆகக் கட்டுப்படுத்துகிறது.

வேக வரம்பை மீறும் வாகனவோட்டிகளுக்கான அபராதங்கள் ஜனவரி 1, 2026 முதல் மேலும் உயர்த்தப்படும்.

அதிகரிக்கப்பட்ட அபராதங்களுக்கு முன்னதாக, வாகனவோட்டிகளுக்கு வேகத்தின் ஆபத்துகள் மற்றும் விளைவுகளை நினைவூட்டுவதற்காக, போக்குவரத்துக் காவல்துறை, விரைவுச்சாலை கண்காணிப்பு, ஆலோசனை அமைப்பு (EMAS) உட்பட பல தளங்களைப் பயன்படுத்துகிறது.

அதேபோல், சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் ஓட்டுவதற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைப் போக்குவரத்துக் காவல்துறை எடுத்துள்ளது. தீவு முழுவதும் போக்குவரத்துச் சந்திப்புகளில் சிவப்பு விளக்கு கேமராக்களைப் பொறுத்துவதோடு, சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் ஓடுவது உட்பட போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய போக்குவரத்து மீறல் அமலாக்க கேமராக்களையும் போக்குவரத்துக் காவல்துறை பயன்படுத்துகிறது.

2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2025ஆம் ஆண்டின் முற்பாதியில் சிவப்பு விளக்கு விதிமீறல்கள் 25.3 விழுக்காடு குறைந்து சுமார் 13,000 ஆக இருந்தது.

சாலைப் பாதுகாப்பு என்பது அனைவரது பொறுப்பாகும். வாகனவோட்டிகள் போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலமும், கருணையுடன் நடந்துகொள்வதன் மூலமும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்.

போக்குவரத்து விதிமீறல்களைக் காணும் பொதுமக்கள், காவல்துறை இணையத்தளம் மூலம் புகார் அளிக்கலாம் என்று சிங்கப்பூர் காவல்துறையின் ஊடக உறவுகள் பிரிவின் உதவி இயக்குநர் சூப்ரின்டெண்டன்ட் லின் ஸிஹாவ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்