கடும்போட்டி தொடரலாம்: டெஸ்மண்ட் லீ

2 mins read
a12ff2a3-5cc4-429c-affe-91f6d4182a5c
இம்மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வலையொலி நேர்காணலில் பங்கேற்ற அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்ப்பதாகவும் ஆயினும் மக்கள் வெற்றிபெறச் செய்தால் மக்களுக்குச் சேவையாற்ற மக்கள் செயல் கட்சி அணியினர் தயாராக இருப்பதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வலையொளி நேர்காணலில் பங்கேற்றபோது, மேற்கில் கடுமையான போட்டியை எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு, திரு லீ இவ்வாறு பதிலளித்தார்.

“2020 பொதுத் தேர்தலில் அங்குப் போட்டி கடுமையாக இருந்தது. இம்முறையும் அது தொடரும் என்பதில் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை,” என்றார் அவர்.

புதிதாக உருவாக்கப்பட்ட வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் திரு லீ களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய ஜூரோங் குழுத்தொகுதி, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இடம்பெற்றுள்ள தெலுக் பிளாங்கா, டோவர் வட்டாரங்களின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலிலும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு லீ வெற்றிபெற்றார். அங்குக் களமிறங்கிய மசெக அணியில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் இடம்பெற்றிருந்தார்.

ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து, 2024 ஜனவரியில் ஈஸ்வரன் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

“வெஸ்ட் கோஸ்ட் தொகுதியை நன்கு பார்த்துக்கொண்டோம் என உறுதியாக நம்புகிறோம். பூன் லே, வெஸ்ட் கோஸ்ட் என இரு வட்டாரங்களையும் நான் கவனித்து வருகிறேன்,” என்று திரு லீ கூறினார்.

இம்முறை திரு லீயின் தலைமையில் மசெக அணி வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் களமிறங்குமா எனக் கேட்டதற்கு, “நான் தயாராக இருக்கிறேனோ இல்லையோ, இறுதி முடிவு எங்கள் தலைவரின் கையில்தான் உள்ளது. ஆனாலும், நான் சேவையாற்ற தயாராக இருக்கிறேன்,” என்று அவர் பதிலளித்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தபோதும், ஓர் அரசியல்வாதியாக, கடந்த ஐந்தாண்டு காலம் மிகக் கடுமையானதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ஓர் அமைச்சராக, கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் பொது வீடமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதத்தைச் சமாளிக்க வேண்டியிருந்த நிலையில், ஈஸ்வரனின் விலகலையடுத்து அவரது தொகுதியையும் திரு லீ பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

குறிப்புச் சொற்கள்