சட்டவிரோதப் போக்குவரத்துச் சேவை வழங்குபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, உரிமம் பெறாத வாகனங்களைப் பயன்படுத்தி ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் (பி2பி) போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்கள் $10,000 வரை அதிகபட்ச அபராதத்தைச் சந்திக்க நேரிடலாம்.
இந்த முன்மொழிவுகள் சட்டமாக அமலுக்கு வந்தால், டெலிகிராம் போன்ற செய்திப் பரிமாற்றத் தளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் சட்டவிரோத ‘பி2பி’ சேவைகளுக்கான விளம்பரங்களை வெளியிடுவது, மற்றவர்களுக்கு அனுப்புவது அல்லது பகிர்வது ஆகியவை சட்டவிரோதமான செயலாகக் கருதப்படும்.
போக்குவரத்துத் துணை அமைச்சர் பே யாம் கெங், புதன்கிழமையன்று (அக்டோபர் 7) நாடாளுமன்றத்தில் பேசுகையில், சட்டவிரோத ‘பி2பி’ சேவை பெறும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் கூறினார்.
சரியான காப்பீட்டு வசதி இல்லாத இத்தகைய சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் பயணிகளை வலியுறுத்தினார்.
“சட்டவிரோத ‘பி2பி’ சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு எதிராக நாங்கள் தற்போதைக்குக் குறிப்பிட்ட தண்டனைகளை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு செய்யலாம்,” என்று நிலப் போக்குவரத்து மற்றும் அது தொடர்பான மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது அவர் கூறினார்.
தற்போதுள்ள விதிகளின்படி, உரிமம் இல்லாத வாகனங்களைப் பயன்படுத்தி ‘பி2பி’ போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் குற்றவாளிகளுக்கு $3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமான ‘பி2பி’ சேவைகளுக்கான விளம்பரங்களை அகற்றுமாறு விளம்பரதாரர்களுக்கு உத்தரவிட சட்டத்தை மாற்றவும் திரு பே முன்மொழிந்தார். மேலும் விளம்பரங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற தகவலை வழங்க இணையத் தளங்கள் தேவை.
2025 ஜூலை மாதம் முதல், சட்டவிரோத ‘பி2பி’ சேவைகளை வழங்க பயன்படுத்தப்பட்ட சுமார் 240 வாகனங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
“விசாரணைக்கு சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகின்றன. ஆனால், வழக்கு ஏதும் தொடரப்படாத நிலையில், உரிமம் இல்லாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க தற்போதுள்ள காலக்கெடு ஒரு மாதமாக மட்டுமே உள்ளது.
“எனவே, இந்தக் கட்டாய விடுவிப்புக் காலக்கெடுவை மூன்று மாதங்களாக நீட்டிக்கவுள்ளோம். இது, விசாரணை நடத்தி முழுமையாக வழக்கைத் தயார் செய்வதற்கு ஆணையத்துக்குப் போதுமான கால அவகாசத்தை வழங்கும்,” என்றார் துணை அமைச்சர்.
இணையவழி விற்பனையாளர்கள் உட்பட, உந்து நடமாட்டச் சாதனங்களின் விற்பனை தொடர்பான விதிமுறைகளும் கடுமையாக்கப்படும் என்றும் திரு பே விவரித்தார்.
