அமெரிக்கரான மெத்தியு ஹைன், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் வந்து செல்பவர். பொறியாளரான அவர், டெக்சஸ் மாநிலத்தின் டெலஸ் பகுதியில் வசிக்கிறார்.
அவரது மனைவியின் குடும்பம் சிங்கப்பூரில் வசிப்பால், அவர் அடிக்கடி சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவது வழக்கம்.
அச்சமயத்தில் உள்ளூர் உணவங்காடிகளுக்கு அவர் வருகை தரத் தவறுவதில்லை. அவ்வாறு அவர் சுவைத்து மகிழ்ந்த உணவுக் கடைகளில் இரண்டு, அவர் நினைவில் நிலைத்து நின்றன.
ஒன்று, முன்பு ஓல்டு ஏர்போர்ட் ரோட்டில் கடந்த 2007 முதல் 2024ஆம் ஆண்டு வரை இருந்த தாயாரும் மகனும் நடத்திய ரொட்டிக் கடை. தற்போது 42 வயதான மெல்வின் சோ என்பவர் ஏறத்தாழ 15 ஆண்டுகள் அவரது தாயாருடன் ‘டோஸ்ட் ஹட்’ என்ற பெயரில் அக்கடையை நடத்திவந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது தாய் மறைந்த பின்பு கடையை புக்கிட் மேராவில் உள்ள அலுவலகக் கட்டடத்துக்கு அவர் மாற்றினார்.
திரு மெத்தியுவைக் கவர்ந்த இரண்டாவது உணவுக் கடை, இந்திய உணவை விற்றது. தோ பாயோவில் இயங்கிய ‘ரஹ்மத் சீஸ் பரோட்டா’ கடையின் உணவு வகைகளை திரு மெத்தியு அதிகம் விரும்பி சுவைத்துள்ளார்.
இந்த இரு கடைகளின் மாதிரி வடிவங்களை ஒன்பது மாதங்களாக ‘லெகோ’ விளையாட்டுப் பொருள் கட்டமைப்பில் உருவாக்கினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சிங்கப்பூர் வந்தபோது இரு உணவுக் கடைகளின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து நினைவுப் பரிசுகளாக அவற்றை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனை அவர் ‘ரெட்டிட்’ எனப்படும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து அது பரவலாகப் பார்வையிடப்பட்டது.
இரு கடை உரிமையாளர்களுக்கும் திரு மெத்தியுவின் நற்செயல், இன்ப அதிர்ச்சியை வழங்கியது. குறிப்பாக ரொட்டிக் கடையில் தமது அன்புத் தாயாரும் நிற்பதை வடிவமைத்த மெத்தியுவின் செயல், மகன் மெல்வினை நெகிழ வைத்தது.
அதேபோல பரோட்டா கடை வியாபாரத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஷாஹுலுக்கும் மாதரி வடிவத்தைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்து.
மிகவும் நுணுக்கமாக கடையில் அவர் பார்த்தபோது இருந்த பல பொருள்களையும் திரு மெத்தியு வடிவமைத்துள்ளார். இவைபோன்ற மாதிரி வடிவங்களை ஓய்வு நேரத்தில் அவர் உருவாக்கி வருகிறார்.
சிங்கப்பூருக்கே உரிய உணவு அங்காடி கலாசாரம் அவரை மிகவும் கவர்ந்துள்ளதை திரு மெத்தியு குறிப்பிட்டார். சாதாரண மக்களும் அலுவலக ஊழியர்களும் ஒரே இடத்தில் இணைந்து அமர்ந்து உணவுண்பது மிகவும் சிறப்பு என்று அவர் தெரிவித்தார்.

