சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுக்கப்பட்ட விதிமுறைகளால் தற்போது வருகையாளர் எண்ணிக்கை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் கட்டுக்குள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகங்களைப் பார்வையிட கட்டாய வருகையாளர் முன்பதிவு, மாணவர்களே ஏற்று நடத்தும் சுற்றுலா வழிகாட்டி முறை, ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னுரிமை போன்ற நடவடிக்கைகளை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
அதன் பயனால் 1,200 சுற்றுலாக்களுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டன. அதே காலகட்டத்தில் மாணவர் தூதுவர்கள் என பல்கலைக்கழகத்தின் 150 மாணவர்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக சேவையாற்ற விண்ணப்பித்தனர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுற்றுலாப் பயண நிறுவனங்கள், முன்பதிவுகள் இல்லாமல் வருகையாளர்களை அழைத்துவரத் தடை விதிக்கப்பட்டது. கல்விப் பருவங்களின் உச்ச நேரங்களில் சுற்றுலாக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த 2024ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகள் பல்கலைக்கழகங்களில் தடையில்லாமல் நடமாடுவதும், உணவு நிலையங்களில் மாணவர்களுக்கு முன்னுரிமை இல்லாமல் உணவு உண்பதும், உள்சேவையில் இயங்கும் பேருந்துகளை பயன்படுத்துவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது நடைமுறையில் உள்ள ஏற்பாடுகள் அவற்றை தணித்து, உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது முக்கியமாக மாணவர்களுக்கு மனநிறைவளிக்கிறது.

