வாடகைக்குக் கிடைக்கும் டவர் டிரான்சிட்டின் புதிய திருமணப் பேருந்து

வாடகைக்குக் கிடைக்கும் டவர் டிரான்சிட்டின் புதிய திருமணப் பேருந்து

2 mins read
fc7d7e58-5389-496d-b715-0f632dd87c8b
டவர் டிரான்சிட் திருமணப் பேருந்தில் அலிஸ்டர் ஓங் - ஜேஸ்மின் குர்னியாவான் இணையர். - படம்: ஷின்மின் டெய்லி

குமாரி ஜேஸ்மின் குர்னியாவான், திருமணம் செய்துகொள்ள நினைக்கும் இணையருக்காக ஒரு மலர் நிறுவனம் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவு ஒன்றைத் தமது காதலரான அலிஸ்டர் ஓங்கிற்கு அனுப்பிவிட்டு, அதோடு அதை அப்படியே விட்டுவிட்டார்.

அந்தப் பதிவைப் பார்த்த 33 வயது ஓங், குமாரி ஜேஸ்மினிடம் தமது திருமண விருப்பத்தைத் தெரிவிக்க சனிக்கிழமை (ஜூன் 27) ரகசியமாக ஒரு திடீர்த் திருமணக் கோரிக்கை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார்.

டவர் டிரான்சிட் சிங்கப்பூர் நிறுவனத்தின் திருமண வாகனமாக மாற்றப்பட்ட பேருந்து ஒன்றின் முன்னால் அந்த நிகழ்வை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ‘புலிம்’ பேருந்துப் பணிமனையில் டவர் டிரான்சிட் நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட அந்தப் புதிய திருமணப் பேருந்து வசதியைப் பயன்படுத்தித் தங்களின் திருமண விருப்பத்தை வெளியிட்ட முதல் இணையர் அவர்கள்.

நேரம் வரும்போது, அந்த இணையரின் திருமணச் சடங்குக்கான செலவுகளைத் தானே ஏற்கப்போவதாக டவர் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஓங், தமது திருமண விருப்பத்தைத் தெரிவிக்கத் தமக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே காலஅவகாசம் இருந்ததாக ஊடகங்களிடம் கூறினார்.

“பேருந்து எங்கள் வாழ்க்கையில் மிக அர்த்தமுள்ள அங்கமாகிவிட்டது; நான் அவளைப் பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவிட்டபிறகுதான், என் வீட்டிற்குச் செல்வதற்கான கடைசிப் பேருந்தை எடுப்பேன்,” என்றார் அவர்.

தமது உடல்நிலையாலும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாலும், பொதுப் பேருந்துகளில் பயணிப்பதே பொதுவாக மிகவும் எளிதான, செயல்திறன்மிக்க வழியாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்நிலையில், சமூக ஊடகக் கருத்துக்கணிப்புகள் மூலம் திருமணப் பேருந்து என்ற யோசனைக்கு பொதுமக்களிடமிருந்து சாதகமான கருத்துகள் கிடைத்ததாக டவர் டிரான்சிட் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொலைக்காட்சி, ‘கராவோக்கே’ இசை வசதிகளைக் கொண்டுள்ள அந்தப் பேருந்தில், தம்பதியர் வாகனத்திலேயே தங்களது திருமண உறுதிமொழியை எடுத்துக்கொள்ளலாம். அதில், மடிக்கக்கூடிய திருமணப் பதிவு மேசையும் அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை இரண்டு மணி நேரத்திற்குச் சுற்றிவர விரைவில் தம்பதியர் அந்தப் பேருந்தை வாடகைக்கு எடுக்கலாம் என்று டவர் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.

அது குறித்த கூடுதல் விவரங்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்