தெம்பனிஸ், பீஷான் நகர மையங்களைப் பொலிவூட்டும் திட்டம் வெளியீடு

தெம்பனிஸ், பீஷான் நகர மையங்களைப் பொலிவூட்டும் திட்டம் வெளியீடு

1 mins read
b978097f-3f3e-4410-9a66-99a651cdb3cd
நகரச் சீரமைப்பு ஆணையத் திட்டத்தின்படி பீஷான் நகர மையம் மறுஉருவாக்கம் பெறுகிறது. - படம்: நகரச் சீரமைப்பு ஆணையம்

தெம்பனிஸ் மற்றும் பீஷான் நகர மையங்களை மறுபடியும் உருவாக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரின் தற்போதைய எதிர்காலப் பொருளியல் மையங்களுக்கான கண்காட்சியின் ஒரு பகுதியாக இரு நகரங்களுக்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன.

சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்குக்கு அருகில் சிலேத்தாரில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படுவதும் திட்டங்களில் அடங்கும்.

1992ல் உருவாக்கப்பட்ட தெம்பனிஸ் வட்டார நிலையம், தெம்பனிஸ் எம்ஆர்டியைச் சுற்றி புத்துயிரூட்டும் திட்டங்கள் காட்சியில் இடம்பெற்றுள்ளதாக ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 24) தெரிவித்தது.

தற்போது தெம்பனிஸ் பேருந்து, எம்ஆர்டி நிலையம் அமைந்துள்ள இடத்தை மையமாகக்கொண்டு வீடுகள், அலுவலகக் கட்டடங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மையம் கலந்த மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள ‘அவர் தெம்பனிஸ் ஹப்’, ‘சன் பிளாசா பார்க்’, தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் உள்ள வீவக அக்கம்பக்க வட்டாரங்களுக்கு எளிதில் செல்வதற்கான வசதிகளும் செய்யப்படும்.

அதற்காக, கூரை போடப்பட்ட நடைபாதைகள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.

இந்நிலையில், பீஷானில் ஜங்ஷன் 8 மற்றும் பீஷான் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள காலியிடங்களில் புதிய அலுவலகங்கள், வேலையிடங்களை உருவாக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கடைகள், சமூக மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் புதிய அலுவலகத்திற்கான இடம் இணைக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

பீஷான் எம்ஆர்டியைச் சுற்றியுள்ள புதிய மேம்பாட்டுப் பணியில் போக்குவரத்து வசதிகளுக்கு மக்கள் எளிதில் செல்வதற்கான திட்டங்களும் அடங்கும்.

நகரச் சீரமைப்பு ஆணையத்தின் அதிகாரிகள், சிலேத்தார் ஈஸ்ட்டில் புதிய தொழில் பூங்காவைக் கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்