தோக்கியோ கடைத்தொகுதியில் நச்சுத் திரவம் தெளிப்பு; 20 பேர் காயம்

தோக்கியோ கடைத்தொகுதியில் நச்சுத் திரவம் தெளிப்பு; 20 பேர் காயம்

1 mins read
6fd70735-c0e0-4841-ab65-90874a48abc7
பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கடைத்தொகுதி ஒன்றில் அடையாளம் தெரியாத திரவத்தை ஆடவர் ஒருவர் தெளித்ததில் ஏறத்தாழ 20 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுக் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்ந்த பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் நிறைந்த ஜின்சா சுற்றுலாப் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் தரைத்தளத்தில் உள்ள தானியக்க வங்கி இயந்திரம் அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நச்சுத் திரவம் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடுமையான நெடி வீசுவதாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, வணிக வளாகத்தின் முன்பக்கச் சாலை முற்றிலும் முடக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எனினும், பொதுமக்கள் பக்கவாட்டு நுழைவாயில்கள் வழியாகப் போக்குவரத்தைத் தொடர்ந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வேதிக் கவச உடை அணிந்த தீயணைப்புப் படையினர், பாதிக்கப்பட்டவர்களைச் சோதனை செய்வதற்காகப் பிரத்தியேக வாகனங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தானியக்க வங்கி இயந்திரத்தைத் தாம் நெருங்கியபோது, தொண்டையில் கடுமையான எரிச்சலும் வலியும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட 70 வயது பெண்மணி ஒருவர் கூறினார். இச்சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்