தெம்பனிஸ் விரைவுச்சாலையில் புதன்கிழமை (அக்டோபர் 7) பல வாகனங்கள் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
காலை உச்சநேரத்துக்கு முன்பு நேர்ந்த அவ்விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிள் தீப்பிடித்துக்கொண்டது.
தீவு விரைவுச்சாலையை நோக்கிய தெம்பனிஸ் விரைவுச்சாலைப் பகுதியில் பொங்கோல் சாலை நுழைவாயிலுக்குப் பிறகு ஒரு கார், லாரி, இரு மோட்டார்சைக்கிள்களுக்கு இடையே நேர்ந்த விபத்து குறித்துக் காவல்துறைக்கு புதன்கிழமை காலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்தது. 40 வயது ஆண் லாரி ஓட்டுநர், லாரியில் 21லிருந்து 61 வயதுக்கு உட்பட்ட பயணிகள் அறுவர், 25 மற்றும் 37 வயதான ஆண் மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவர் ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
லேசாகக் காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. லாரி ஓட்டுநரும் கார் ஓட்டுநரான 55 வயது ஆடவரும் காவல்துறை விசாரணையில் ஒத்துழைத்து வருகின்றனர்.
விபத்து குறித்த படங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுவருகின்றன. அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்பே பொதுமக்கள் தீயை அணைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
