வட்டப் பாதையில் வெள்ளிக்கிழமை காலை ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாற்றால் டோபி காட்-புரொமினாட் நிலையங்களுக்கும் மரினா பே-ஸ்டேடியம் நிலையங்களுக்கும் இடையே ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
குறிப்பிட்ட அந்த ரயில் நிலையங்களுக்கு இடையே தடங்களில் செல்லும் அனைத்து ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன.
ரயில் சேவை தாமதம் குறித்து காலை 5 மணிக்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்ட எஸ்எம்ஆர்டி நிறுவனம், கூடுதலாக 30 நிமிடப் பயண நேரத்தைக் கருத்தில் கொள்ளும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
“புரொமினாட்-எஸ்பிளனேட் நிலையங்களுக்கும், புரொமினாட்- பேஃபிரண்ட் நிலையங்களுக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் கண்டறியப்பட்டது. இதனால் அப்பாதையில் செல்லும் ரயில்கள் வேகம் குறைவாக இயக்கப்படும்,” என காலை 6 மணியளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
வட்டப் பாதைக்குப் பதிலாக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, டௌன்டவுன் பாதைகளைப் பயன்படுத்தும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக smrttravelchit.sg என்னும் இணையத்தளம் வழியாக மின்- பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என காலை 8.45 மணிக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் எஸ்எம்ஆர்டி பதிவிட்டது.
பாய லேபார்-டோபி காட் நிலையங்களுக்கு இடையேயும் மரினா பே நிலையத்திலும் இணைப்புப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாய லேபார்- புரொமினாட் நிலையங்களுக்கு இடையிலும் இலவச இணைப்புப் பேருந்துச் சேவைக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் அது சொன்னது.
கோளாற்றைச் சரிசெய்யும் பணி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.