வர்த்தகமும் முதலீடுகளும் அமெரிக்கா, சிங்கப்பூரில் வேலைகளை உருவாக்கும்: துணைப் பிரதமர் கான்

வர்த்தகமும் முதலீடுகளும் அமெரிக்கா, சிங்கப்பூரில் வேலைகளை உருவாக்கும்: துணைப் பிரதமர் கான்

2 mins read
a54182fa-7821-4183-88bc-61febf2fc81d
துணைப் பிரதமர் கான் கிம் யோங் சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க வர்த்தகச் சபை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) ஏற்பாடு செய்திருந்த வட்டாரப் பொருளியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை அந்த இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நீடிக்கும் பொருளியல் உறவு உணர்த்துவதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு 2004ஆம் ஆண்டு அமலுக்கு வந்ததிலிருந்து, இருதரப்பு வர்த்தகம் கணிசமாக வளர்ந்து இரு நாட்டு தொழில்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்மையளித்து வருகிறது என்றார் திரு கான்.

சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க வர்த்தகச் சபை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) ஏற்பாடு செய்திருந்த வட்டாரப் பொருளியல் மாநாட்டில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

“தற்போதைய நிலையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் அமெரிக்காவில் சிங்கப்பூர் செய்துள்ள முதலீடுகள் மூலம் கிட்டத்தட்ட 350,000 அமெரிக்க வேலைகள் உருவாகக்கூடும்.

சிங்கப்பூருடன் அமெரிக்கா கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிசமான வர்த்தக உபரியைப் பேணி வருகிறது. 2025ஆம் ஆண்டு அந்த உபரி US$33 பில்லியனைக் (S$41.8 பில்லியன்) கடந்தது,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் ஏறத்தாழ 6,600 அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் அவற்றின் மூலம் சிங்கப்பூரின் ஆகப்பெரிய முதலீட்டாளராக அமெரிக்கா திகழ்கிறது என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

அதேவேளை, சிறிய நாடாக இருந்தாலும், அமெரிக்காவில் முதலீடு செய்யும் மூன்றாவது பெரிய ஆசிய நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“தளவாடங்கள், வேளாண் தொழில், விண்வெளித் துறை, கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

“வர்த்தகமும் முதலீடும் இரு நாடுகளின் பொருளியல் திறன்களை வலுப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை சிங்கப்பூரின் பங்களிப்பு உணர்த்துகிறது,” என்றார் அவர்.

இருப்பினும், நடப்பில் உள்ள அமெரிக்க வரிகளும் இன்னும் பல புதிய நடவடிக்கைகள் எழக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் வர்த்தக முடிவுகளைப் பாதிப்பதோடு உலக அளவிலும் வட்டார அளவிலும் நிச்சயமற்ற தன்மையை அதிகரிப்பதாக துணைப் பிரதமர் சுட்டினார்.

“நிச்சயமற்ற தன்மை தொடர்பான எல்லாக் காரணிகளையும் நம்மால் நீக்கிவிட முடியாது. ஆனால் இணைந்து பணியாற்றுவதன் மூலம், நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொண்டு, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதற்கான கூடுதல் நம்பிக்கையை வணிகங்களுக்கு அளிக்க முடியும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்