டான் டோக் செங் மருத்துவமனையும் நன்யாங் தொழில்நுட்பக் கல்விக்கழகமும் மருத்துவப் பராமரிப்புத் திட்டம் ஒன்றில் ஒருங்கிணைந்துள்ளன. அதன்படி, கழகத்தில் பாரம்பரிய சீன மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீண்டநாள் மருத்துவ தேவையுள்ளோரையும் மாற்று மருத்துவ முறைகளை நாடுவோரையும் நேரடியாக மருத்துவமனைகளில் சந்தித்து சேவை வழங்குவர்.
சிங்கப்பூரில் மேற்கத்திய மருத்துவத்தையும் பாரம்பரிய சீன வைத்தியமுறைகளையும் (TCM) ஒருசேர பயன்படுத்தும் வழக்கம் பெருகி வருகிறது.
நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரியின் பாரம்பரிய மருத்துவப் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் டான் டோக் செங் மருத்துவமனையில் 2027ஆம் ஆண்டு முதல் அந்தச் சிகிச்சைமுறைகளை நோய்வாய்ப்பட்டோருக்கு வழங்குவதில் பயிற்சிகள் பெறுவர். வலியைக் கட்டுப்படுத்துதல், நாள்பட்ட நோய்களை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளை அவர்கள் ஆராய்வர்.
இந்த முன்னெடுப்பு, சிங்கப்பூரின் இருபெரும் அமைப்புகளின் ஆதரவோடு தொடங்கப்படவுள்ளது. தேசிய சுகாதார குழுமம் (என்ஹெச்ஜி ஹெல்த்), டிஎஃப்ஐ (DFI Retail Group) சில்லறை வர்த்தகக் குழுமம் ஆகிய அமைப்புகள் நோய் எதிர்ப்புக்கான சேவைகளையும் மருந்துகளையும் பொதுமக்கள் பெற ஒன்றிணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிகிக்சைக்கென மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் நோயாளிகளை மருத்துவர்கள் அன்றாடம் சுழற்சிமுறையில் சோதனை செய்வது வழக்கம். அவ்வாறு சோதனையிடும் நிலையில் இளம் மருத்துவர்கள், மூத்த நிபுணர்களுடன் நோயாளிகளைப் பார்வையிடுவர். அவர்களோடு, பாரம்பரிய சீன மருத்துவம் பயிலும் பட்டக் கல்வி மாணவர்கள் உடன் செல்வர்.
‘ஒருங்கிணைந்த மருத்துவத்தின்வழி நோய்களைத் தடுத்து மீட்டெடுத்தல்’ என்று இந்த ஒத்துழைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது. பாரம்பரிய சீன மருத்துவம் எந்த வகையில் நோயளிகள் மீண்டுவரவும் அவர்களின் பராமரிப்புக்கும் உதவுகிறது என்பதை அமைப்புகள் ஆராயவிருக்கின்றன.
இதற்கான பங்காளித்துவ ஒப்பந்தம், வியாழக்கிழமை (அக்டோபர் 9) சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற 23ஆவது சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. மாநாட்டில் சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் உரையாற்றினார். நோயாளிகளின் பராமரிப்பை இந்த மருத்துவக் கல்வி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தும் என்று அமைச்சர் சொன்னார். மேற்கத்திய, பாரம்பரிய மருத்துவ மாணவர்கள் “இரு சிகிச்சைகளிலும் உள்ள ஆய்வுகள் மற்றும் ஆதாரப்பூர்வ தீர்வுகளுக்கான நடைமுறைகளில் பயிற்சிபெற” இது வழியமைக்கிறது என்றும் கூறினார் திரு கோ.
“ஒருங்கிணைந்த பராமரிப்புச் சேவைகளை நாடுவோரின் எண்ணிக்கை வளர்கிறது. அவர்களின் தேவைக்கு உகந்த வகையில் இந்த கூட்டமைப்பு, மருத்துவத் துறையில் இயங்குவோரின் திறன்களுக்கு மெருகூட்டும்” என்று மனிதவள மூத்த துணை அமைச்சருமான டாக்டர் கோ தமது உரையில் விவரித்தார்.