சிங்கப்பூரில் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நடைபெற்ற சீனத் திருமணம் ஒன்று பலரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் உள்ள கங்சா ரோட்டின் குடியிருப்பு வீட்டின் கீழ்த்தளத்தில் 43 வயது கெலனும் 46 வயது டீனாவும் தங்கள் திருமணக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
“1988ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பம் இங்கு வசித்துவருகிறது. எங்களுக்கு இங்குப் பல நண்பர்கள் உள்ளனர். இந்த வட்டாரத்தில் உள்ள மூத்தோர் பலரும் எங்களுக்குப் பரிட்சயமானவர்கள்,” என்ற கெலன், கீழ்த்தளத்தில் திருமணத்தை நடத்தும் யோசனை தமது தாயிடமிருந்து வந்ததாகக் கூறினார்.
திருமணத்திற்கு அழைக்கப்பட்ட மூத்தோர் சிலர் சக்கர நாற்காலியிலும் வேறு சிலர் ஊன்றுகோலுடனும் உள்ளனர் என்ற தமது 67 வயது தாய், கீழ்த்தளத்தில் வைத்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்று கருதியதாகக் கெலன் பகிர்ந்துகொண்டார்.
திருமண அலங்காரத்துக்கான பொறுப்புகளைக் கெலனின் மனைவி டீனா ஏற்றுக்கொண்டார். உட்புற வடிவமைப்பாளரான அவர், கீழ்த்தளத்தை மிகவும் உற்சாகத்துடன் அலங்கரித்தார்.
பெரும்பாலான அலங்காரப் பொருள்களை டாவ்பாவ் என்ற தளத்திலிருந்து வாங்கியதாக டீனா கூறினார்.
சிவப்பு நிற கருப்பொருளில் செய்யப்பட்ட அலங்காரங்கள் சீனப் புத்தாண்டு உணர்வையும் ஏற்படுத்தின.
கீழ்த்தளத்தில் நடந்த திருமணத்துக்கு கெலன் - டீனா செலுத்திய மொத்தத் தொகை $398.
இடப் பற்றாக்குறை காரணமாக கெலனும் டீனாவும் அனைத்தையும் எளிமையாக நடத்த முடிவெடுத்தனர்.
திருமண விருந்தில் கலந்துகொண்டோரில் சிலருக்குச் சிங்கப்பூரின் கடந்த காலம் கண்முன் நிழலாடியது.
“முன்பெல்லாம் இப்படித்தான் திருமணங்கள் நடைபெறும் என்று என் பெற்றோர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் அதைப் பார்க்க தனித்துவமாக இருக்கிறது,” என்றார் திருமணத்தில் கலந்துகொண்ட ஷெரல்.
ஒட்டுமொத்தத்தில் நேரடி இசை, நல்ல உணவு எனத் திருமணக் கொண்டாட்டம் எந்தக் குறையும் இன்றி நிறைவடைந்ததாகக் கெலன் - டீனா தம்பதி குறிப்பிட்டனர்.

