வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடங்களின் தரைத்தளத்தில் உள்ள பாரம்பரிய மளிகைக்கடை கூடிய விரைவில் இல்லாமல் போகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு காலத்தில் சிங்கப்பூரில் இத்தகைய பல பாரம்பரிய மளிகைக்கடைகள் இருந்தன.
பல ஆண்டுகளாகப் பல வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடங்களின் தரைத்தளத்தில் பாரம்பரிய மளிகைக்கடைகள் இருந்து வந்தன.
ஆனால் அவற்றின் எண்ணிக்கை தற்போது பேரளவில் குறைந்துவிட்டது.
சிங்கப்பூரெங்கும் பல இடங்களில் பேரங்காடிகள் இருப்பதாலும் பலர் இணையம் மூலம் மளிகைப்பொருள்களை வாங்குவதாலும் தங்கள் வருமானம் அதிகளவில் சரிந்துவிட்டதாக பாரம்பரிய மளிகைக்கடைக்காரர்கள் பலர் மிகுந்த வருத்தத்துடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
பலர் முதுமை அடைந்துவிட்ட நிலையில் தங்களுக்குப் பிறகு அந்தக் கடையை நடத்த யாரும் முன்வரவில்லை என்று கூறினர்.
மேலும் புதிய வீவக குடியிருப்புக் கட்டங்களின் தரைத்தளம் பழைய கட்டடங்களின் தரைத்தளத்தைப் போல பெரிதல்ல.
எனவே, அவ்விடங்களில் பாரம்பரிய மளிகைக்கடைகளைத் திறப்பது சாத்தியமல்ல என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, பழைய கட்டடங்கள் தற்போது இருக்கும் பாரம்பரிய மளிகைக்கடைகளே இறுதியானவை என்று கூறப்படுகிறது.
இந்தப் பாரம்பரிய மளிகைக்கடைகளை 1970களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியது.
1980களிலும் 1990களிலும் அவற்றின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.
அக்காலகட்டத்தில் வீவக குடியிருப்புக் கட்டடத்தில் தரைத்தளத்தில் கிட்டத்தட்ட 560 பாரம்பரிய மளிகைக்கடைகள் இருந்தன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய கடைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக வீவக வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன.
2014ஆம் ஆண்டில் ஏறத்தாழ 380 பாரம்பரிய மளிகைக்கடைகள் இருந்தன.
இந்த எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்து ஏறத்தாழ 240ஆகப் பதிவாகி உள்ளது.

