சிங்கப்பூரின் பரபரப்புக்கு நடுவே காலத்தைக் கடந்து நிற்கும் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம், இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை அதன் தனித்துவமான பாரம்பரியப் பொலிவோடு வரவேற்றது.
தேசிய நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வழிபாட்டில், பல தலைமுறைகளைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றாகக் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
வண்ணமயமான கண்ணாடிச் சாளரங்களும் தேவாலயச் சூழலுக்கு இனிமை சேர்த்த இசைக்கருவிகளின் ஒலியும் வழிபாட்டிற்கு தனிச்சிறப்பை அளித்தன.
பாடகர் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களை வழிநடத்தினர்.
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான ஆங்கிலிக்க வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் பலருக்குத் தலைமுறைகளாகத் தொடரும் அனுபவமாக அமைந்தது.
“இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவது தனிச்சிறப்பு வாய்ந்தது. என் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் இதே தேவாலயத்தில் வழிபட்டிருக்கிறார்கள்,” என்றார் தங்கையோடு தேவாலயத்திற்கு வருகை புரிந்திருந்த சப்ரீனா சாலமன், 51.
பாரம்பரியமும் நவீனமும் ஒன்றிணையும் வகையில் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனைகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அவர் கூறினார்.
கிறிஸ்து தங்களுக்காக மரித்ததை நினைவுகூரும் வகையில் திருவிருந்தில் அப்பமும் திராட்சை ரசமும் வழங்கப்படும் என்று தேவாலயத்தில் நடத்தப்படும் பாரம்பரியச் சடங்கை விளக்கினார் சப்ரீனாவின் தங்கை செலினா சாலமன், 46.
தொடர்புடைய செய்திகள்
முதல் முறையாக செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்திற்கு வருகை புரிந்து குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடினார் சஞ்சாரி முகர்ஜி, 32.
“செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் தனிச் சிறப்பே இங்கு நிலவும் அமைதிதான். அதைக் கூட்டுப் பிரார்த்தனையின்போது நன்றாக உணர முடிந்தது,” என்றார் அவர்.
தங்கள் இரண்டரை வயது இரட்டையர்களுக்கு கிறிஸ்துவின் கதையை எடுத்துரைத்து, அவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதே தங்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம் என்று அவர் கூறினார்.
இவ்வாறு இளையர்கள், குடும்பத்தினர், மூத்தோர் எனப் பல்வேறு வயதினரும் ஒன்றாக அமர்ந்து கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடியது இப்பண்டிகையின் ஒருமைப்பாட்டை எடுத்தியம்பியது.

