சீனப் புத்தாண்டை முன்னிட்டு இரு சோதனைச்சாவடிகளிலும் நெரிசல்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு இரு சோதனைச்சாவடிகளிலும் நெரிசல்

1 mins read
7aaf87a1-f0c4-4bd4-85d5-9013790f1231
விடுமுறைக் காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் வழியாக வாகனங்களில் ஜோகூர் செல்லவிருப்போர், போக்குவரத்து நிலவரத்தைக் கருத்தில்கொண்டு பயணங்களை திட்டமிடுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜோகூருடனான இரண்டு சோதனைச்சாவடிகளிலும் கடுமையான நெரிசல் ஏற்படும் என்பதை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உட்லண்ட்ஸ், துவாஸ் வழியாக விடுமுறைக் காலத்தில் வாகனங்களில் ஜோகூர் செல்லவிருப்போர், போக்குவரத்து நிலவரத்தைக் கருத்தில்கொண்டு பயணங்களை திட்டமிடுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரையில் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாள்களில் சோதனைச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

சட்டவிரோதமாக கடத்தப்படும் மின்சிகரெட்டுகள், பட்டாசுகள், உணவு வகைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை ஆணையம் சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளவிருப்பதால் வாகனங்களில் அங்குச் செல்வோருக்குத் தாமதம் ஏற்படலாம்.

அனைத்து பயணிகளும் மைஐசிஏ (MyICA) கைப்பேசிச் செயலியில் உள்ள ‘கியூஆர்’ குறியீட்டு முறையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் வெளிநாடுகளுக்குச் செல்வோர், அவரவர் கடப்பிதழ்களை வைத்துக்கொள்வதும் அவசியமாகும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்த்துக்கொள்ள பயணிகள் இரு நகரங்களுக்கு இடையே பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதும் வரவேற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறையின்போது, வாகனத்தில் பயணம் செய்தோர் மூன்று மணி நேரம்வரை சோதனைச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதை ஆணையம் நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்