தேசிய தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்குப் பலர் செல்லக்கூடும் என்பதால் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் குடிநுழைவுச் சோதனைகளைக் கடப்பதற்குக் கூடுதல் நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) அறிக்கை வெளியிட்டது.
பயணங்களைத் தொடங்கும் முன் சோதனைச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்க்கும்படி ஆணையம் பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.
எதிர்வரும் உச்ச காலக்கட்டத்தில் கட்டாயமாகப் பயணம் செய்ய விரும்புவோர் கூட்ட நெரிசலைத் தவிர்க்க எல்லைகளுக்கு இடைப்பட்ட பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
பயணிகளும் குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கும்படியும் உரிய தடங்களில் பயணம் செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மே 29ஆம் தேதியிலிருந்து ஜூலை 1ஆம் தேதிக்கு இடைப்பட்ட ஜூன் பள்ளி விடுமுறையின்போது உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளை இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான பயணிகள் கடந்ததை ஆணையம் சுட்டியது.
ஜூன் 20ஆம் தேதி 578,000 பயணிகள் நிலவழி சோதனைச் சாவடிகளைக் கடந்தனர். இதற்குமுன் ஆக அதிக எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பதிவானது. அப்போது 562,000 பேர் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்.
2024ஆம் ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க இந்த ஆண்டு பள்ளி விடுமுறையின்போது பயணிகளின் சராசரி எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
கார்களில் பயணம் செய்தோர் சோதனைச் சாவடிகளைக் கடக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்தனர்.
அதிகாரிகளின் கட்டளைகளைப் பின்பற்றாத பயணிகள்மீதும் சோதனைச் சாவடிகளில் குற்றம் புரிவோர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் சொன்னது.