அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் போக்குவரத்துக் காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் போக்குவரத்துக் காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு

2 mins read
26b0c9cb-8ad2-4f52-ab1d-1fa96e330e58
சார்ஜண்ட் பதவியில் இருந்த சிவசூரியா மீது அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

காவல்துறை புகார் குறித்த தகவலைச் சட்டவிரோதமாகப் பகிர்ந்துகொண்டதன் தொடர்பில் டிசம்பர் 20ஆம் தேதியன்று போக்குவரத்துக் காவல் அதிகாரியான சிவசூரியா மணியம் கேசவல், 26, மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உள்துறை அமைச்சின் வெவ்வேறு தளங்களின் மூலம் பலமுறை தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற முயன்ற நோக்கத்துக்காகவும் சிவசூரியா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளையும் சிவசூரியா எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

சார்ஜண்ட் பதவியில் இருந்த சிவசூரியா, கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ததும் அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிவசூரியா 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியிலிருந்து பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.

போக்குவரத்துக் காவல்துறையில் விசாரணை அதிகாரியாக இருந்த சிவசூரியா, குறிப்பிட்ட ஒரு காவல்துறை புகாரிலிருந்து ‘சம்பவம் நிகழ்ந்த நேரம்’ குறித்த தகவலைச் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டு அதை பிரேடன் ஓங் யிங் ஷான் என்பவருடன் 2022ல் ஜூலை 14 அல்லது 15ஆம் தேதியன்று பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சின் வெவ்வேறு தளங்களில் பலமுறை தேடுதல் மேற்கொண்ட சிவசூரியா, ‘பிரேடன்’ என்ற பெயரையும் அடையாள அட்டை எண், கைப்பேசித் தொடர்பு எண், வாகன எண் போன்றவற்றையும் உள்ளிட்டுத் தேடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சிவசூரியா, தன்மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து வழக்காட உள்ளதாக அறியப்படுகிறது.

சிவசூரியா நீதிமன்றத்தில் மீண்டும் ஜனவரி மாதம் முன்னிலையாவார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்