சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024), சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகள் காணாத அளவிற்கு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் ஏற்படுத்திய விபத்துகளில் மூன்றில் ஒரு விபத்துக்கு வேகமாக வாகனத்தைச் செலுத்தியது காரணம் என்று தெரியவந்துள்ளது.
விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே வேகமாக வாகனத்தை ஓட்டியதற்காகப் பிடிபட்ட ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டு அதிகரித்தது.
போக்குவரத்துக் காவல்துறை பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதைக் காட்டுகின்றன.
சென்ற ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வேகக் கட்டுப்பாட்டை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை 64.8 விழுக்காடு அதிகம். இதைச் சுட்டிய போக்குவரத்துக் காவல்துறை, வாகனம் ஓட்டுவோர் சாலை விதிகளை அலட்சியப்படுத்துவதாகத் தோன்றுவதாகக் கூறியது.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய சம்பவங்களில் பத்தில் ஒன்று போக்குவரத்துக் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கேமராக்களில் வேக விதிமுறை அமலாக்க அம்சத்தை 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் போக்குவரத்துக் காவல்துறை செயல்படுத்தத் தொடங்கியது.
சென்ற ஆண்டு முழுவதும், வேகக் கட்டுப்பாட்டை மீறிய மொத்தம் 100,720 சம்பவங்கள், போக்குவரத்து அமலாக்கப் பிரிவு கேமராக்களில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. இது 2023ஆம் ஆண்டு பதிவான எண்ணிக்கையைவிட இருமடங்குக்குக்குமேல் அதிகம் என்று கூறப்பட்டது.
வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக பிடிபட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்ததைக் குறிப்பிட்ட போக்குவரத்துக் காவல்துறை, கேமராக்கள், காவல்துறையின் நடவடிக்கை குறித்து வாகனத்தை ஓட்டுவோர் அறிந்திருப்பதாகக் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 என்றும் முந்தைய ஆண்டு அது 136ஆகப் பதிவானது என்றும் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.
சென்ற ஆண்டு இத்தகைய விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை 9,302ஆகப் பதிவானது. 2023ல் அது 8,941ஆக இருந்தது.

