அங் மோ கியோ ஹப் அருகே 18 மாதங்களுக்குப் போக்குவரத்துத் தாமதம்

அங் மோ கியோ ஹப் அருகே 18 மாதங்களுக்குப் போக்குவரத்துத் தாமதம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Oct 2026 - 12:54 pm

2 mins read

வாகன ஓட்டுநர்கள் அடுத்த 18 மாதங்களுக்கு ‘அங் மோ கியோ ஹப்’ கடைத்தொகுதி அருகே போக்குவரத்துத் தாமதங்களை எதிர்பார்க்கலாம்.

அந்த வட்டாரத்தில் சாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளதே அதற்குக் காரணம்.

குறுக்குத் தீவு எம்ஆர்டி கட்டுமானத்தின் சுரங்கப்பாதைப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தரையின்கீழ் சிக்கலாகிக் கிடக்கும் எஃகுக் கம்பிகளை அகற்றுவதற்காக அந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

போக்குவரத்துப் பாதைகள் மாற்றிவிடப்படுவதால், நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி 2028 மே மாதம் வரையில் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்தில் தாமதத்தை எதிர்நோக்குவர்.

அங் மோ கியோ அவென்யூ 8 சந்திப்பிற்கு அடுத்து, அங் மோ கியோ அவென்யூ 3ல் ‘அங் மோ கியோ ஹப்’ கடைத்தொகுதியைக் கடந்து செல்லும் சாலையின் ஒரு பகுதி வாகனப் போக்குவரத்திற்கு மூடப்படும். பேருந்துகளுக்கு ஒரு தடம் மட்டும் திறந்திருக்கும்.

இந்த அறிவிப்புகளை நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தனது அறிக்கையில் வெளியிட்டது.

இந்தச் சாலை மூடலும் போக்குவரத்து மாற்றங்களும் குறுக்குத் தீவு எம்ஆர்டி நிலத்தடிப் பணிகளைத் தடுக்கும் தடிமனான கம்பிகளைப் பொறியாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்க உதவும் என்று ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடையூறு எவ்வளவு நீளத்திற்கு ஏற்பட்டுள்ளது, இடையூற்றை ஏற்படுத்தும் சாதனங்கள் அங்கு ஏன் வந்தன, இவை குறுக்குத் தீவு எம்ஆர்டி கட்டுமானப் பணிகளின் காலக்கெடுவை எவ்வாறு பாதிக்கும் என்பன பற்றி எல்லாம் ஆணையம் தீர்மானிக்க உள்ளது.

அதுவரை முதற்கட்ட நிலத்தடிப் பாதைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

மேலும், தரைத்தளத்தை வலுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டப் பணிகளை 2030ஆம் ஆண்டில் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது..

சாங்கியில் உள்ள ஏவியேஷன் பார்க் முதல் பிரைட் ஹில் வரை 29 கி.மீ தொலைவிற்கு 12 ரயில் நிலையங்களின் கட்டுமானத்தை உள்ளடக்கியது அந்த முதற்கட்டம்.

அந்தப் பாதையில் அமைய இருக்கும் நான்கு போக்குவரத்து நிலையங்களில் அங் மோ கியோ நிலையமும் ஒன்று.

சுரங்கப்பாதைப் பணிகள் நிறுத்தப்பட்டதால் முதற்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி உரிய காலத்தில் முடிக்கப்படுமா அல்லது அதில் தாமதம் ஏற்படுமா என்று வினவியதற்கு ஆணையத்தின் குறுக்குத் தீவு எம்ஆர்டி திட்டக் குழு இயக்குநர் எங் சூன் இயாங் பதில் கூறினார்.

தடைகளால் ஏற்படும் தாக்கத்தைத் தங்கள் குழு இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக அவர் தமது பதிலில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்