போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியான 32 வயது முகமது ஃபிர்தவுஸ் யூசோஃப் மீது, ஆபத்தான முறையில் வாகனமோட்டி சாலையைக் கடக்க முயன்ற பாதசாரியின் மரணத்தை விளைவித்ததாக ஜூன் 25ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர், தை செங் வட்டாரத்தில் சென்ற ஆண்டு பாதசாரிமேல் மோட்டார்சைக்கிளை மோதி மரணம் விளைவித்ததாகக் கூறப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் ஹவ்காங் அவென்யூ 3க்கும் கிம் சுவான் டிரைவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஃபிர்தவுஸ், மணிக்கு 94.3 கிலோமீட்டர் முதல் 111கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டியதாகக் கூறப்பட்டது.
அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிலோமீட்டராகும்.
வெகுவேகமாக ஓட்டியதால், டான் லெங் ஹிங் எனும் ஆடவர் இடது பக்கமிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது ஃபிர்தவுசால் உரிய நேரத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்த முடியவில்லை.
மோட்டார்சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த 58 வயது டான் பின்னர் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போகிறாரா இல்லையா என்பதை ஃபிர்தவுஸ், செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தெரிவிக்கவில்லை.
வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மரணம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனமோட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஃபிர்தவுசுக்கு ஈராண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவர் வாகனமோட்டவும் தடை விதிக்கப்படலாம்.
மேல்விவரங்களுக்காக ஃபிர்தௌசைத் தொடர்புகொண்டிருப்பதாக சிஎன்ஏ தெரிவித்தது.


