சாலை விதிமுறைகளை மீறியதற்காக வர்த்தக வாகனங்களை ஓட்டிய 154 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் காவல்துறை, இம்மாதம் 20 முதல் 22ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 150க்கும் மேற்பட்டோருக்கு அபராதச் சீட்டு வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் ஏறக்குறைய 276 வர்த்தக வாகனங்கள் நிறுத்தப்பட்டுச் சோதனையிடப்பட்டதாக ஆகஸ்ட் 3ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.
இதில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது, இருக்கை வார் அணியத் தவறியது முதல் இடதுபுறப் பாதையில் செல்லத் தவறியது வரையிலான பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
மேலும், தகுதியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், மோட்டார் வாகனக் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டிய 34 முதல் 47 வயதுக்குட்பட்ட மூவர் பிடிபட்டனர்.
சோதனையில் குறைந்தது போக்குவரத்து தொடர்பான 99 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் பற்றிய விவரங்கள் மேல் நடவடிக்கைக்காக நிலப் போக்குவரத்து வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பு வில்லைகள் முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் காவல்துறை நினைவூட்டியுள்ளது.
வேக வரம்பை மீறுபவர்கள், தங்களது வாகனத்தில் உள்ள வேகக் கட்டுப்பாட்டுச் சாதனம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்கப் பரிசோதனைக்கு அனுப்பலாம்.
விதிகளுக்குக் கீழ்ப்படியாத லாரிகள், சிங்கப்பூர்ச் சாலைகளைப் பயன்படுத்துதுவற்கு சட்டப்படி தடை விதிக்கப்படும். அவற்றின் சாலை வரியைப் புதுப்பிக்க முடியாது என்பதோடு, அவற்றுக்கான காப்பீட்டுப் பலன்களும் குறைக்கப்படலாம்.

