சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டினால் அதற்கான தண்டனைப் புள்ளி, அபராதம் ஆகியவை 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரிக்கும்.
இதை சனிக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
இது பற்றி கூறிய திரு சண்முகம், 2020அம் ஆண்டிலிருந்து சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றார். இந்த எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளைநோய்க் காலத்துக்கு முன்பு இருந்ததைவிடக் குறைவுதான் என்றபோதும், அது அதிகரிக்கும் வேகம் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு 7,200 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 142. கடந்த 2024ஆம் ஆண்டு சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டி மரணமடைந்தோர் எண்ணிக்கை 44 விழுக்காடு கூடி46 ஆக உயர்ந்தது என்றும் அமைச்சர் விளக்கினார்.
அதுபோல், சாலையில் விதிமீறி வாகனத்தை வேகமாக ஓட்டிய சம்பவம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு 2024ஆம் ஆண்டு 192,000ஆகப் பதிவானது என்று சொங் பாங் தொகுதியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சொன்னார்.
சொங் பாங் தொகுதியில் நடைபெற்ற அந்த அறிமுக நிகழ்ச்சிக்கு மக்கள் கழகம், சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து போக்குவரத்து காவல்துறை சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.