உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமீறல்; 30 பேர் பிடிபட்டனர்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமீறல்; 30 பேர் பிடிபட்டனர்

2 mins read
18d4b5c0-0ae1-4e70-b927-8bc7225dc75e
சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போது, இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டுதல், சட்டவிரோதமாக வலதுபுறம் திரும்புதல், வரிசையை மீறிச் செல்லுதல் போன்ற குற்றங்களுக்காக வாகன ஓட்டுநர்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மே 28 முதல் ஜூன் 1 வரை விசாக தினத்தையொட்டிய நீண்ட வார விடுமுறையின்போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிகளை மீறிய 30 ஓட்டுநர்கள் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய ஒன்பது பேரும் அவர்களில் அடங்குவர். இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டியதற்காகவும், வரிசையை மீறி முந்திச் சென்றதற்காகவும் அந்த வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போது,  இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டுவது, சட்டவிரோதமாக வலப்புறம் திரும்புவது, ஆபத்து, இடையூறு அல்லது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவது, வரிசையை மீறுவது போன்ற குற்றங்களுக்காக இந்த வாகன ஓட்டிகள் பிடிபட்டதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட ஒன்பது வாகனங்களின் ஓட்டுநர்களைத் தவிர, 21 வாகன ஓட்டுநர்கள் யூ-வளைவு செய்து மீண்டும் வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

பிடிபட்டோரில் பாதிப் பேர் மேல்நடவடிக்கைக்காகப் போக்குவரத்து காவல் துறையிடம் அனுப்பப்பட்டனர் என்று ஆணையம் கூறியது.

“நிலவழிச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும்போது போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அத்துடன்,  சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று ஆணையம் வலியுறுத்தியது.

ஒழுக்கமீறல் மற்ற வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்றும் ஆணையம் சுட்டியது. 

முன்னதாக, இந்த நீண்ட வார விடுமுறையின்போது அதிகமான போக்குவரத்து நெரிசல் இருக்கும் எனத் தெரிவித்திருந்த ஆணையம்,  தனது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் வாகன ஓட்டுநர்களுக்கு நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்