சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துதல், போக்குவரத்து நெரிசல், கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லுதல் போன்ற பிரச்சினைகள் மறைந்த பிரதமர் லீ குவான் யூ வாழ்ந்த எண் 38, ஆக்ஸ்லி ரோடு வீட்டினருகே வசிக்கும் குடியிருப்பாளர்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகும்.
தேசிய நினைவுச் சின்னமாக அந்த வீடு அரசாங்கத்தால் அறிவிக்கப்படுவதை குடியிருப்பாளர்கள் வரவேற்கின்றனர். ஆயினும், அதனால் போக்குவரத்து சார்ந்த இக்கட்டான சூழ்நிலைகள் மேலும் அதிகரிக்கும் என்பது அவர்களைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
மக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஒன்றுகூடும் இடமாக அந்த வீடு மாறும்போது, அதிக போக்குவரத்து, கூட்டம், சத்தம் ஏற்படுவது பற்றி குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் புதன்கிழமை (நவம்பர் 5) செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக்ஸ்லி ரோடு ஒரு குறுகிய இருவழிச் சாலை. இருபக்கமும் தனியார் வீடுகள் அமைந்த அச்சாலையில் ஒரே நேரத்தில் பல வாகனங்களை நிறுத்துவது சிரமம் நிறைந்தது. அருகே உள்ள டப்லின் ரோடு போன்ற சாலைகளைப் பயன்படுத்துவதும் சாத்தியம் இல்லை.
இதுபற்றி கருத்துரைத்த சொத்து நிபுணர்கள், அப்பகுதியில் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டனர். தனியார் சொத்துகளில் செய்யப்படும் மாற்றங்கள் பல அம்சங்களை முன்வைத்து எடுக்கப்படுபவை என்பதால் குடியிருப்பாளர்கள் பொறுமை காக்கவேண்டும் என்றனர்.
தரை வீடுகளுடன் அண்மையில் கட்டப்பட்டுள்ள பல அடுக்குமாடி தனியார் வீடுகளும் அங்கு உள்ளன. பல ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் குடியிருப்பாளர்கள் சிலர், அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டின் நலன் சார்ந்தே இருக்கும் என்பதால், எந்த மாற்றத்தையும் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏனெனில் பல புத்தம்புதிய மேம்பாடுகளும் வசதிகளும் ஆக்ஸ்லி சாலை வட்டாரத்தில் நிறுவப்படும் என்பதும் முக்கியக் காரணம்.

