சூதாட்டப் பழக்கத்தின் அவலம்: சம்பளத்தை விஞ்சிய கடன்

சூதாட்டப் பழக்கத்தின் அவலம்: சம்பளத்தை விஞ்சிய கடன்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Oct 2026 - 1:24 pm

2 mins read

ஆண்டுக்கு $340,000க்குமேல் வருமானம் ஈட்டிய பொறியியல் ஆலோசகர் ஒருவர், சூதாட்டப் பழக்கத்தால் $360,000க்குமேல் இழந்து கடனில் மூழ்கியுள்ளார்.

மாதத்திற்கு $28,000க்குமேல் சம்பாதித்தபோதிலும், சூதாட்டக்கூடத்தில் மாதந்தோறும் ஏற்பட்ட $30,000க்கும் அதிகமான நட்டத்தை அவரால் ஈடுசெய்ய முடியவில்லை.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய அவர், தம்முடைய கள்ளக்காதலியும் தொழில் பங்காளியின் மகளுமான பெண்ணிடம் $800,000 கடன் வாங்கினார்.

அந்தப் பெண்ணும் ஆண்டுக்கு $43,000 சம்பளம் பெற்றுக்கொண்டு, $250,000 வரை சூதாட்டத்தில் இழந்தவர். எனினும், செல்வந்தரான தந்தையின் உதவியால் அப்பெண்ணுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படவில்லை.

தம் வீட்டை மறுசீரமைக்கப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அப்பெண்ணிடமிருந்து ஆடவர் கடன் பெற்றார். அப்பெண்ணும் தம் வீட்டின்மீது $1.26 மில்லியன் வங்கிக் கடன் எடுத்து, அதில் $800,000ஐ ஆடவரிடம் கொடுத்தார்.

பின்னர் மேலும் $270,000 வரை அவருக்குப் பணப் பரிமாற்றம் செய்தார். ஆனால், ஆடவர் அந்தப் பணத்தைச் சூதாட்டத்திற்கும் சொந்தச் செலவுகளுக்கும் பயன்படுத்தினார்.

இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டபோது, நிலுவையில் இருந்த $580,000 கடனைத் திருப்பித் தருமாறு அப்பெண் கோரினார். ஆனால், ஆடவர் அப்படிக் கடன் எதுவுமே வாங்கவில்லை எனக் கூறி வழக்குத் தொடுத்தார்.

வங்கிப் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள், எழுத்துபூர்வச் சான்றுகளை ஆய்வுசெய்த உயர் நீதிமன்றம், நிலுவைத் தொகையான $580,000ஐ வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு ஆடவருக்கு உத்தரவிட்டது.

பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கும்போது எழுத்துபூர்வ ஆவணங்கள் அவசியம் என்பதை இந்த வழக்கு உணர்த்துகிறது. மேலும், மத்திய சேம நிதிக் கணக்கில் போதிய சேமிப்பு இல்லாததால், ஆடவருக்கு எதிர்காலத்தில் வாழ்வாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது.

குறிப்புச் சொற்கள்