பாலஸ்டியர் சாலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காலை டிரெய்லர் டிரக் ஒன்று சறுக்கி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த சிலிண்டர் தொட்டி அவ்வாகனத்திலிருந்து விலகி நடைபாதைமீது சரிந்தது.
இதனால் அச்சாலையில் காலை 9 மணியிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு காலை 10 மணியளவில் விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் சென்றபோது, டிரெய்லர் வாகனத்தில் அத்தொட்டியைப் பத்திரப்படுத்தி வைக்கும் மூன்றில் இரண்டு வார்கள் அவிழ்ந்திருந்ததைக் காண முடிந்தது. அத்தொட்டியின் ஒரு முனை நடைபாதைமீது விழுந்து கிடந்தது.
டிரெய்லர் டிரக் ஓட்டுநரான திரு திலிப், கிம் கியட் சாலையிலிருந்து பாலஸ்டியர் சாலைக்கு வாகனத்தைத் திருப்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார்.
தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் பாலஸ்டியர் சாலையில் மூன்றில் இரு தடங்கள் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் மூடப்பட்டன. போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க போக்குவரத்துக் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
டிரெய்லர் டிரக்கையும் தொட்டியையும் அப்புறப்படுத்த, காலை 11.15 மணியளவில் பாரந்தூக்கி ஒன்று அங்கு வந்தடைந்தது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை எனவும் டிரெய்லர் டிரக்கை ஓட்டிய 31 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருகிறார் எனவும் காவல்துறை தெரிவித்தது.