ரயில், பேருந்துப் பயணங்களை மேற்கொள்ளும் பெரியவர்கள், சனிக்கிழமை (டிசம்பர் 28) முதல் ஒவ்வொரு பயணத்துக்கும் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 6 விழுக்காடு உயர்த்தப்படுகிறது.
சலுகைக் கட்டணம் செலுத்தும் மூத்தோர், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த சம்பள ஊழியர்கள் ஆகியோர் ஒவ்வொரு பயணத்துக்கும் கூடுதலாக நான்கு காசு செலுத்த வேண்டும்.
ரொக்கக் கழிவு அட்டை, கடன்பற்று அட்டை அல்லது கட்டண அட்டையைக் கொண்டு கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தும்.
பேருந்துகளில் ரொக்கமாகச் செலுத்தப்படும் கட்டணங்களில் மாற்றம் எதுவுமில்லை. பெரியவர்களுக்கான மாதாந்தரப் பயண அட்டை, மாதாந்தரச் சலுகை அட்டைகளுக்கான கட்டணத்திலும் மாற்றம் எதுவுமில்லை.
2024ல் பொதுப் போக்குவரத்து மன்றத்தின் வருடாந்தரக் கட்டண மறுஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமையும் கட்டண மாற்றங்கள், செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன.
கட்டணச் சேவைகளை ஒழுங்குபடுத்தும் மன்றம், 2023ல் மூலாதாரப் பணவீக்க அதிகரிப்பு, சம்பள உயர்வு இவ்விரண்டின் அடிப்படையில் கட்டண உயர்வு 6 விழுக்காடாக இருப்பதாகக் கூறியிருந்தது.
ஆனால், எரிசக்திக் கட்டணங்கள் 2022 சாதனை அளவிலிருந்து குறைந்ததையும் கட்டண உயர்வு காட்டுவதாக மன்றம் தெரிவித்திருந்தது.
18.9 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டியதில் 12.9 விழுக்காட்டை வருங்கால மறுஆய்வுக்காக நிறுத்தி வைத்த பின்னர், எஞ்சிய 6 விழுக்காட்டுக் கட்டண உயர்வு அனுமதிக்கப்படுவதாகவும் மன்றம் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
வாழ்க்கைச் செலவின உயர்வு சிங்கப்பூரர்களின் கவலையாக இருப்பதை உணர்ந்ததால், 6 விழுக்காட்டுக் கட்டண உயர்வை அனுமதித்ததாகவும் மன்றம் குறிப்பிட்டிருந்தது.
கட்டண உயர்வின் தாக்கத்தைக் குறைக்க, $1,800 வரை தனிநபர் மாத வருமானம் கொண்ட குறைந்த வருமான சிங்கப்பூர்வாசிக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் $60 மதிப்பிலான பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளை அரசாங்கம் வழங்கும் என போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் தெரிவித்தன.