தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 27ஆம் தேதியும் ரயில் சேவை பாதிப்பு இருக்கும்

2 mins read
f94b494e-5d48-425e-922c-76b492450777
கிளமெண்டி நிலையத்திற்கும் டோவர் நிலையத்திற்கும் இடையிலான 1.6 கிலோ மீட்டர் தொலைவில், தண்டவாளம் 34 இடங்களில் சேதமடைந்திருந்ததைப் பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் மின்சாரக் கோளாறு காரணமாக ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை புதன்கிழமை (செப்டம்பர் 25) முதல் தடைப்பட்டுள்ளது.

அந்த சேவைத் தடை வெள்ளிக்கிழமையும் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் தெரிவித்துள்ளன.

பழுதான ரயில், தண்டவாளத்தையும் அதிலிருந்த சாதனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையைக் கட்டங்கட்டமாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் இரண்டாவது நீண்ட ரயில் தடங்கலாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 25ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 358,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ரயில் சேவை தடையால் செப்டம்பர் 26ஆம் தேதி பாதிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை 516,000க்கும் அதிகம் என்று கூறப்பட்டது.

காரணம் விவரிக்கப்பட்டது

எதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்பது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

புதன்கிழமை காலை 9 மணியளவில் முதல் தலைமுறை கவாசக்கி கனரக தொழில்துறை ரயில் கோளாற்றால் பாதிக்கப்பட்டது. அது உலு பாண்டான் பணிமனைக்குத் திரும்பும் வழியில் தண்டவாளத்தில் சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆறு பெட்டிகளைக் கொண்ட கனரக தொழில்துறை ரயில் டோவர் நிலையத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் மூன்றாவது பெட்டியில் உள்ள ஒரு சக்கரத்தின் அச்சுப்பெட்டி தண்டவாளத்தில் விழுந்தது. இது பெட்டியின் சக்கரங்களில் சேதத்தை ஏற்படுத்தியது.

அதனால் ரயில் தண்டவாளம், தண்டவாளத்தில் இருந்த சாதனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இது காலை 9.25 மணி அளவில் பூன் லே நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் நிலையத்திற்கும் இடையிலான தண்டவாளத்தில் மின்சார கோளாற்றை ஏற்படுத்தியது.

கிளமெண்டி நிலையத்திற்கும் டோவர் நிலையத்திற்கும் இடையில் உள்ள 1.6 கிலோ மீட்டர் தொலைவில் தண்டவாளம் 34 இடங்களில் சேதமடைந்திருந்ததாகப் பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரயிலை வேறு தடத்திற்கு மாற்றிவிடும் கருவிகளும் சேதமடைந்துள்ளன. மேலும் கம்பிவடங்கள், ரயிலுக்கு மின்சாரம் தரும் கருவிகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

கோளாற்றால் பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ரயில் 35 ஆண்டுகளுக்கு மேலாக சேவை வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்கள் கோளாற்றைச் சரிசெய்ய இரவு முழுவதும் வேலை செய்துவருவதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளிப் பதிவு மூலம் தெரிவித்தார்.

சேவைத் தடைக்கும் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்கும் தாம் வருந்துவதாக அமைச்சர் சீ தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் அனைத்துக் கோளாறுகளும் சரிசெய்யப்படும் என்றார் அவர்.

அமைச்சர் சீ தற்போது உலகளாவிய நீடித்த நிலைத்தன்மை போக்குவரத்துக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்