வடக்கு-தெற்கு ரயில் பாதையில் ரயில் ஒன்று பழுதடைந்ததால் ரயில் சேவை கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குத் தடைப்பட்டது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 14) நிகழ்ந்தது.
இந்நிலையில், ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் பாதையில் நியூட்டன் எம்ஆர்டி நிலையத்துக்கும் அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான பயண நேரம் கூடுதலாக 25 நிமிடங்கள் எடுக்கும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் காலை 11.44 மணி அளவில் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தது.
ரயில் பழுது காரணமாக நியூட்டன், நொவீனா, தோ பாயோ, பிரேடல், பீஷான், அங் மோ கியோ ஆகிய எம்ஆர்டி நிலையங்கள் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட நிலையங்களில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகப் பிற்பகல் 12.21 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
ரயில் சேவைத் தடையை முன்னிட்டு இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது. அதை நிறுத்திக்கொள்வதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியது.
காலை 11.35 மணி அளவில் ரயில் பழுதடைந்ததை அடுத்து, நிலைமையைச் சரிசெய்ய தமது ஊழியர்களை உடனே அனுப்பிவைத்ததாக எஸ்எம்ஆர்டி ரயில்களின் தலைவர் திரு லாம் சியூ காய் பிற்பதல் 12.52 மணிக்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட ரயிலிலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.