ரயில் பழுதடைந்ததால் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் கரையோரப் பூந்தாட்டங்கள் நிலையத்துக்கும் பேஷோர் நிலையத்துக்கும் இடையே எம்ஆர்டி சேவை புதன்கிழமை காலை (மார்ச் 12) தடைப்பட்டது.
சேவைத் தடை 40 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது.
ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்கும் பேஷோர் நிலையத்துக்கும் இடையே ரயில் சேவை இயங்குவதாகவும் காலை 6.24 மணி அளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
ரயில் சேவைத் தடை காரணமாகக் கரையோரப் பூந்தோட்டங்கள் நிலையத்துக்கும் பேஷோர் நிலையத்துக்கும் இடையே வழங்கப்பட்ட இலவசப் பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
அதிகாலை 5 மணி அளவில் தஞ்சோங் காத்தோங் நிலையத்தில் ரயில் பழுதடைந்ததாக எஸ்எம்ஆர்டி காலை 6.45 மணிக்கு ஃபேஸ்புக் பதிவு மூலம் விளக்கம் அளித்தது.
பழுதுபார்ப்புப் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க தனது பொறியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டதாக அது கூறியது.
சேவைத் தடை குறித்து பாதிக்கப்பட்ட நிலையங்களில் அறிவிப்புகள் செய்யப்பட்டதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு உதவ எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு எஸ்எம்ஆர்டி மன்னிப்பு கேட்டுக்கொண்டது.