பாய லேபார் எம்ஆர்டி நிலையத்துக்கும் புவனா விஸ்டா எம்ஆர்டி நிலையத்துக்கும் இடைப்பட்ட வட்ட ரயில் பாதையில் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (மே 20) காலை உச்சவேளையின்போது தடைப்பட்டது.
ரயில் பழுதடைந்ததால் இந்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து காலை 8.30 மணி அளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கழித்து, பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ரயில் சேவை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புகிறது என்றும் அது தெரிவித்தது.
அதன் பிறகு, சிறிது நேரத்தில் ரயில் சேவை வழக்கநிலைக்கு முழுமையாகத் திரும்பிவிட்டதாக எஸ்எம்ஆர்டி கூறியது.
சேவைத் தடையின்போது பயணிகளுக்கு வழங்கப்பட்ட இலவசப் பேருந்துச் சேவை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பூமலை எம்ஆர்டி நிலையத்துக்கும் ஃபேரர் ரோடு எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே காலை 8.15 மணி அளவில் ரயில் பழுதடைந்ததாக அது கூறியது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

