கிழக்கு-மேற்குப் பாதையில், தானா மேரா நிலையத்துக்கும் எக்ஸ்போ நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை, தண்டவாளப் பணிகள் முன்கூட்டியே நிறைவுபெற்றதை அடுத்து, ஒரு நாளுக்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.
பணியில் ஈடுபட்ட குழுக்களின் செயல்திறன்மிக்க ஒருங்கிணைப்பாலும் நல்ல வானிலையாலும் அது சாத்தியமானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டது.
முன்னதாக, ரயில் சேவை மார்ச் 18ஆம் தேதி தொடங்கவிருந்தது.
கிழக்கு-மேற்குப் பாதையை சாங்கி பணிமனையுடன் இணைக்கும் ரயில் தண்டவாளங்களைத் துண்டிக்கும் பணிகளுக்காக, அந்த இரு நிலையங்களுக்கும் இடையிலான சேவை மார்ச் 14ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தானா மேரா, எக்ஸ்போ ரயில் நிலையங்களுக்கு இடையிலான இடைவழிப் பேருந்துச் சேவை ‘S8’, மார்ச் 17ஆம் தேதி காலையில் தொடர்ந்து செயல்படும் என்றும் பிற்பகலிலிருந்து அது செயல்படாது என்றும் ஆணையம் தெரிவித்தது.
தண்டவாளங்கள், மின் விநியோகம், சமிக்ஞை முறைகள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனைகள் உட்பட பாதுகாப்பான செயல்முறைகளை உறுதிசெய்ய விரிவான சோதனைகள் நடத்தப்பட்டதாக ஆணையம் கூறியது.
கிழக்கு-மேற்குப் பாதையைப் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனையுடன் இணைப்பதற்காகச் செய்யப்பட்ட மூன்றாவது, இறுதித் தற்காலிகச் சேவை நிறுத்தம் அது.
சேவை மாற்றத்தின்போது பயணிகளுக்கு உதவவும் பணிகளை நிறைவுசெய்யவும் நிலப் போக்குவரத்து ஆணையம், ‘எஸ்எம்ஆர்டி’ ஆகியவற்றைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொறியாளர்களும் குத்தகைதாரர்களும் 250 ஊழியர்களும் உதவினர்.
தொடர்புடைய செய்திகள்
கிழக்கு-மேற்குப் பாதையைப் புதிய பணிமனையுடன் இணைக்க, கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10 வரை முதல்முறையாக தானா மேரா நிலையத்துக்கும் தெம்பனிஸ் நிலையத்துக்கும் இடையே ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

