ஒன்றுபட்ட சமூகத்தை அமைப்பதில் சிங்கப்பூரின் முயற்சிகளை ஆதரிக்க, மக்கள் கழகம் 2026 முதல் 1,000 சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும்.
அத்துடன், மக்கள் கழகத்தின் சமூக ஒருங்கிணைப்பாளர் திட்டம் எனும் புதிய திட்டத்தின்கீழ் இப்பயிற்சி வழங்கப்படும்.
மரினா பே சேண்ட்சில் வியாழக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற குடிமக்கள் ஆலோசனைக் குழுக்களின் (சிசிசி/CCC) 60வது ஆண்டு நிறைவு விருந்தில் பிரதமரும் மக்கள் கழகத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் இதை அறிவித்தார்.
மக்கள் கழகம் உயர்கல்விக் கழகங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தும்.
‘சிசிசி’ஐ சார்ந்தவர்களுக்குப் பயிற்சி வழங்குவதுடன் இத்திட்டம் தொடங்கும். இதன்வழி, ஒவ்வொரு குழுத்தொகுதியிலும் சமூகத்தை ஒருங்கிணைப்பதில் பயிற்சிபெற்ற தலைவர்கள் உருவாவர்.
குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள், சிங்கப்பூரைக் கட்டியமைப்பதில் முக்கியப் பங்காற்றிவந்துள்ளன.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்து, கம்பத்து வீடுகளில் வாழ்வோரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மாற ஊக்குவிப்பது, வீட்டு விண்ணப்பங்கள், செயல்முறைகளுடன் உதவுவது, தேசிய சேவையின் அவசியத்தைக் குடும்பங்களுக்கு உணர்த்துவது, சார்ஸ், டெங்கிப் பரவல் போன்ற அவசர நிலைகளில் உதவுவது, இன, சமய நல்லிணக்கக் குழுக்களை (IRCC) அமைப்பது போன்ற எண்ணற்ற சேவைகளில் அக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
அவற்றை அங்கீகரிக்கும் வகையில் 1,200 அடித்தள ஆலோசகர்கள், சிசிசி அடித்தளத் தலைவர்களுடன் விருந்து நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
சட்ட அமைச்சரும் மக்கள் கழகத் துணைத் தலைவருமான திரு எட்வின் டோங், பிரதமருடன் வருகையளித்தார்.
“சிசிசிகள் சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கின,” என்றார் பிரதமர் வோங்.
மலேசியாவுடன் இணையப் போராடியபோது, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியபோது, அவரது வருகையை ஒருங்கிணைக்கச் சமூகத் தலைவர்கள் ‘வரவேற்புக் குழுக்களை’ அமைத்ததாகப் பிரதமர் கூறினார்.
“1964 இனக் கலவரங்களின்போது இதே தலைவர்கள்தான் ‘நல்லுறவுச் செயற்குழுக்கள்’ அமைத்து நல்லிணக்கத்தைக் கட்டிக்காத்தனர்; சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதும் அவை ‘சிசிசி’களாக உருவெடுத்தன,” என்றார் பிரதமர் வோங்.
மரின் பரேட் சிசிசியில் 1976ல் இணைந்து, 1981 முதல் 2005 வரை அதன் தலைவராகச் சேவையாற்றிய 89 வயது திரு புஹேந்திரனை பிரதமர் வோங் பாராட்டினார்.
“மரின் பரேட்டில் திரு புஹேந்திரனை சிறுவயதிலிருந்து எனக்குத் தெரியும். ஆங்கிலம், மலாய், தமிழ், ஹாக்கியன் என நான்கு மொழிகளில் உரையாடும் அவர் எப்போதும் குடியிருப்பாளர்களுக்கு உதவி செய்வார்.
“அப்போது மரின் பரேடுக்கு என சொந்த சமூக மன்றம் இல்லை. திரு புஹேந்திரன் தன் அடுக்குமாடிக் கட்டடக் கீழ்த்தளத்தை, குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடமாக மாற்றினார். அதைத் தேசா 43 அல்லது வில்லேஜ் 43 என்று அழைப்பர்,” என்றார் பிரதமர் வோங்.
தெம்பனிஸ் சங்காட் சிசிசியில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வுபெற்ற திரு கோங் மன் குவோங், 85, பூன் லே சிசிசி உறுப்பினர் திருவாட்டி சகினா ஆகியோரையும் பிரதமர் பாராட்டினார்.
“60 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் வெகுதூரம் வந்துள்ளது. இன்று நம் சமூகம் வெகுவாக வேறுபடுகிறது. சவால்கள் இன்னும் பன்முகம் கொண்டவை; மக்களின் தேவைகளும் இன்னும் பலதரப்பட்டவை. அவர்கள் (சிங்கப்பூரர்கள்) அனைத்து நேரங்களிலும் உதவிக்கு முதல் அணுகலாக அடித்தளத் தலைவர்களை நாடாமல் இருக்கக்கூடும்; தம் சொந்த சமூக மன்றங்களிலுள்ள நடவடிக்கைகளோடு நின்றுவிடாமலும் இருக்கலாம்.
“அதனால் மக்கள் கழக அடித்தள இயக்கமும் சிசிசிகளும் தொடர்ந்து மாறவேண்டும்,” எனக் கூறிய பிரதமர் வோங், அதற்காக ‘சிசிசி’கள் கவனம் செலுத்தவேண்டிய மூன்று கூறுகளைச் சுட்டினார்.
“முதலாவதாக, சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் உங்கள் அடித்தள அமைப்புகளை வழிநடத்துங்கள். இரண்டாவதாக, அடித்தள அமைப்புகளுக்கிடையே கூடுதல் தொடர்பை ஊக்குவியுங்கள்; அவைத் தனித்துச் செயல்படக்கூடாது. மூன்றாவதாக, உங்கள் தொண்டூழியர்களை வளர்த்து, வலுப்படுத்துங்கள்,” என்றார் பிரதமர் வோங்.

